பொருட்குப் பொருள் தெரியற்க என்பது

387.பொருட்குப்பொருள் தெரியின் அதுவரம் பின்றே.

உரிச்சொற்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். பொருட்குப் பொருள்தெரியின் எல்லையின்று, எ-று.

அஃதாவது உறு என்பதற்குப் பொருள் மிகுதி யென்றால், மிகுதி யென்பதற்குப் பொருள் யாதெனில், அதற்கும் ஒரு வாய்பாட்டாற் பொருளுரைப்பின், அதற்குப் பொருள் யாதெனப் பின்னும் வினாவும்; அவ்வாறு வினாவ, அவ்வாராய்ச்சி முற்றுப் பெறாதாம். அதனால், வினாவுவானும் அவ்வாறு வினாவற்க; செப்புவானும் அவ்வாறு செப்பற்க என்றவாறு,

வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால், இவ்வாராய்ச்சி பெயர்ச்சொற்கும் ஒக்குமென்று கொள்க. அஃதேல், அப்பொருண்மை யுணராதான் அதனை யுணருமாறு என்னையெனின், அது வருகின்ற சூத்திரத் தான் விளங்கும் என்க.

(95)