உணர்த்துமாறு உணர்த்தின் பொருட்குத் திரிபின்று எனல்

388.பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின்.

இஃது ஆசிரியன்கட் கிடந்ததோர் இயல்புணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். பொருட்குப் பொருள் வினவிய மாணாக்கன் அவ்வாறு வினவானாம்; அவன் கொள்ளுமாறு ஆசிரியன் அஃதுணர்த்த வல்லனாயின், எ - று.

என்றது, ஈண்டுப் பயின்றனவாக எடுத்தோதப்பட்ட சொற்களைப் பயிலாதாற்கு அவன் பயின்ற வாய்பாட்டான் உணர்த்துக. உணர்த்தவே, பொருட்குப் பொருள் ஆராய்தலில்லை என்றவாறு,

அஃதேல், 1உறுதவ நனிஎன வரூஉம் மூன்றும்-மிகுதி செய்யும் பொருள என்ப என்பதனாற் பயனின்றாம்; அஃதறியாதாற்குப் பிறவாய் பாட்டாற் பொருளுணர்த்த வேண்டுதலி னெனின், அதற்கு விடை வருகின்ற சூத்திரத்தான் விளங்கும்.

(96)


1. சூ. 3.