அப்பொருளுணர்ச்சியும் உணர்வார்க்கே இயலும் எனல்

390.மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா.

உரிச்சொற்கு உரியதோரிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

வந்தது கொண்டு வராதது முடித்தல் என்பதனாற் பெயர்ச்சொற்கு உரிய இலக்கணமும் உணர்த்திற்றென்று கொள்ளப்படும்.

இ - ள். இச் சொற்குப் பொருள் இதுவென நியமித்தற்குக் காரணம் விளங்கத் தோன்றா. எ-று.

எனவே, காரணமுளதென்பதூஉம். அது புலனாகாதென்பதூஉம் கூறியவாறாம். என்னை புலனாகாமை எனின், மிகுதல் என்பதற்குப் பொருளாவது முன்பு நின்ற நிலையிற் பெரிதாதல் அப்பொருண்மை அச்சொற் காட்டுதற்குக் காரணம் உரைப்பரிதாதலான் அஃதேல், காரணமுளபோலக் கூறியவதனாற் பயனென்னையெனின். பொருண்மேற் சொன்னிகழ்தல் தொன்றுதொட்டு வருகின்றதாதலின், உலகினுள் மிக்காரெல்லாரும் காரணமின்றி வழங்குபவோ என்னும் ஐயங் குறித்துக் கூறினார்.

அஃதேல், இன்னவெழுத்து, இப்பொருள்படும் எனவும்; இத்தன்மைத்து எனவும், இப்பயன்தரும் எனவும் மற்றை நூலகத்தும் பிறாண்டும் உரைக்கப்படு மாகலான், காரணம் உரைப்பரிது என்பது குற்றமெனின், அதற்கு விடை வருகின்ற சூத்திரத்தான் விளங்கும்.

(98)