9. எச்சவியல்

செய்யுள் செய்தற்கு உரிய சொற்கள்

393.இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்
றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.

என்பது சூத்திரம்.

இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், எச்சவியல் என்னும் பெயர்த்து; கிளவியாக்கம் முதலாக உரிச்சொல்லோத்து ஈறாகக் கிடந்த எட்டோத்தினுள்ளும் உணர்த்தாத பொருளை ஈண்டுணர்த்துதலாற் பெற்ற பெயர்.

இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், ஒருவகையாற் செய்யுட்குரிய சொல்லின் பாகுபாடுணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். இயற்சொல்லும், திரிசொல்லும், திசைச் சொல்லும், வடசொல்லும் எனவரும் நால்வகைத்து, செய்யுளாக்குதற்குரிய சொல், எ-று.

அவையாமாறு தத்தம் சிறப்புச் சூத்திரத்தான் உணரப்படும்.

(1)