நிறுத்த முறையானே இயற்சொல்லாமாறு உணர்த்துதல்
நுதலிற்று.
இ - ள். இயற்சொல்லாவன தாம், செந்தமிழ் நாட்டு வழக்கோடு பொருந்தித் தம்பொருள் வழாமல் இசைக்குஞ் சொற்கள், எ-று.
செந்தமிழ் நாடாவது:--வையையாற்றின் வடக்கும், மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்கும் என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர் இலக்கணங் காணாமையானும், வையை யாற்றின் தெற்காகிய கொற்கையும், கருவூரின் மேற்காகிய கொடுங்கோளூரும், மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ்திரிநிலமாதல் வேண்டுமாதலானும், அஃது உரையன்று என்பார் உரைக்குமாறு;-
| 2வடவேங்கடந், தென்குமரி, ஆயிடைத், தமிழ்கூறு நல்லுலகத்து, வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளு நாடி. |
என்றமையானும், இதனுள் தமிழ் கூறும் நல்லுலகமென விசேடித் தமையானும், கிழக்கும் மேற்கும் எல்லைகூறாது தெற்கெல்லை கூறியவதனாற் குமரியின் தெற்காகிய நாடுகளை யொழித்த வேங்கடமலையின் தெற்கும், குமரியின் வடக்கும், குணகடலின் மேற்கும், குடகடலின் கிழக்கு மாகிய நிலம் செந்தமிழ் நிலமென்றுரைப்ப.
அந்நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமல் இசைக்குஞ் சொல்லாவன:--சோறு, கூழ் மலை, மரம், உண்டான், தின்றான், ஓடினான், பாடினான் என்னுந் தொடக்கத்தன.
இவை அந்நிலத்துப்பட்ட எல்லா நாட்டினும் ஒத்து இயறலின் இயற்சொல்லாயின. இவற்றைச் செஞ்சொல் எனினும் அமையும்.
(2)
1. ‘வழாஅமை யிசைக்கும்’ எனப் பாடங் கொள்வர் இளம்பூரணர். ‘வழாமை யிசைக்கும்’ எனப் பாடங் கொள்வர் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும்.
2. தொல், எழுத்து, பாயிரம்.