வட சொல்லிற்குரிய இலக்கணம்

397.வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.

வடசொற்கிளவி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். வடசொல்லாகிய சொல்லாவது வடமொழிக்கேயுரியவாகிய எழுத்தை நீக்கித் தமிழ்மொழிக்குரிய எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும், எ - று.

எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும், வடநாட்டிற் பயில வழங்குதலின் வடசொல் ஆயிற்று. வடசொல்லென்றதனால் தேய வழக்காகிய பாகதச் சொல்லாகி வந்தனவுங் கொள்க.

வடமொழியாவன:--வாரி, மணி, குங்குமம் என்னுந் தொடக்கத்தன. வட்டம், நட்டம், பட்டினம் என்பன பாகதம், பிறவும் அன்ன.

(5)