எஞ்சியது உணர்த்துதல் நுதலிற்று
இ - ள். பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின் என்பது: பெண்மையைக் குறித்த உயர்திணைப் பெண் பிறப்பினுள். எ-று. ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும் என்பது, ஆண்மைத் தன்மையிற் றிரிந்த பெயர்க்கண் நிற்குஞ் சொல்லும். எ - று. தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் என்பது தெய்வப் பொருண்மையைச் சுட்டிய பெயர்க்கண் நிற்குஞ் சொல்லும். எ - று. இவ்வென அறியும் அந்தம் தமக்கிலவே என்பது, இவையென அறிய நிற்கும் ஈற்றெழுத்தினைத் தமக்கென இல. எ - று. உயர்திணை மருங்கிற் பால் பிரிந்திசைக்கும் என்பது, உயர்திணை மருங்கிற் பாலாகிப் பிரிந்திசைக்கும். எ - று.
ஆண்மை திரிந்த பெயராவது பேடி, அச்சத்தி னாண்மையிற் றிரிந்தாரைப் பேடியென்ப வாகலான். ஈண்டு அப்பெயர் பெற்றது அலியென்று கொள்க. அலி மூவகைப்படும். ஆணுறுப்பிற் குறைவின்றி ஆண் உடன்மையிழந்ததூஉம், பெண்ணுறுப்பிற் குறைவின்றிப் பெண்டன்மை யிழந்ததூஉம், பெண்பிறப்பிற் றோன்றிப் பெண்ணுறுப்பின்றித் தாடி தோற்றி ஆண்போலத் திரிவதூஉமென. அவற்றுட் பிற் கூறியது ஈண்டுப் பேடி யெனப்பட்டது. அதன்கண் நிற்குஞ் சொல்லாவது வினைச்சொல்.
இப் பேடி யென்னுஞ் சொல்லோடு தொடரும் வினைச்சொல்லும், தெய்வப் பொருண்மை குறித்த பெயரோடு தொடரும் வினைச்சொல்லும், உயர்திணை யாண்பாலறி சொல்லானும், பலரறி சொல்லானும் ஒலிக்கும் என்றவாறாயிற்று.
உதாரணம் முன்னர்க் காட்டுதும்.
தேவரும் மக்களும் விலங்குமாகிய கதிப் பொருண்மை கூறி நரக கதிப் பொருண்மை கூறாததென்னை யெனின், அக்கதிமேனிகழ்வதோர் வழக்கின்மையிற் கூறாராயினர். நரகன் வந்தான், நரகி வந்தாள், நரகர் வந்தார், என வழங்குபவாலெனின், அக்கதியுட் டோன்றுவர் ஆணும் பெண்ணுமாகிப் போகம் நுகர்வரென்னும் இலக்கணமின்மையான், மக்களிற் றூய்மை யில்லாதாரை யுலகத்தார் வழங்குமாறவையென்க. நரகர் துயருழப்பர் என அக்கதிமேற்றோற்றுவார் மேலும் வருமாலெனின், அவ்வாறு வருவன பால் கூறப்படுதலின்றி ஆணும் பெண்ணும் வரையறுக்கப்படாத பொருளை உயிர்த்தன்மையைக் குறித்து உயர்திணைப் பன்மையான் வழங்கினாரென்க.
(4)