ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி முடியுமாறு

40.

ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி
தொழில்வேறு கிளப்பின் ஒன்றிடன் இலவே.

இதுவும் அது

இ - ள். ஒரு பொருள் குறித்த வேறுவேறாகிய பெயர்ச் சொல் தொழிலைப் பெயர்தோறுங் கிளப்பின் ஒரு பொருளாகிய ஒன்றும் இடன் இல, எ - று.

எனவே, பல பெயர் அடுக்கி வரின் ஒரு வினையான் முடித்தல் வேண்டும் என்றவாறாம்.ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் என வரும். ஆசிரியன் வந்தான், பேரூர் கிழான் வந்தான், செயிற்றியன், இளங்கண்ணன், சாத்தன் வந்தான் எனின் ஒரு பொருள் ஆதல் தோன்றாதாம்.

1விழைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி,
கடற்கடம் பெறிந்த காவலன் வாழி,
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி,
பூந்தண் பொருநைப் பொறையன் வாழி,
மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழி.

என்றவழி, ஒருபொருள்குறித்த பெயர்தோறும் வினை வந்ததால் எனின், இச்சூத்திரத்தில் தொழில் வேறுகிளப்பின் என்பதற்கு மொழிந்த பொருளோடு ஒன்றவைத்தல்2என்பதனான் வேறுவேறு வினை கிளப்பின் ஒன்றிடன் இல வெனப் பொருளுரைக்கப் பெயர்தோறும் ஒரு வினைவரின் ஒன்றும் என்பது பெற்றாம். அதனானே இவ்வாறு வருவன அமைத்துக்கொள்க. விழைந்து முதிர்கொற்றத்து விறலோன் வாழ்க. கடற்கடம் பெறிந்த காவலன் கெடுக எனின் வழுவாம்.

(40)


1. சிலம்பு - 23: (80 - 84)

2. ஒப்பக் கூறல் (பா - ம்).