சுண்ணப் பொருள்கோள்

402.சுண்ணந் தானே
பட்டாங் கமைந்த ஈரடி யெண்சீர்
ஒட்டுவழி யறிந்து துணித்தன ரியற்றல்.

சுண்ணமாகிய பொருள்கோள் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். சுண்ணமாவதுதான் அளவடியான் அமைந்த ஈரடிக்கண் எண் சீரும் ஒரோவொரு சீராகத்துணித்துப் பொருந்து வழியறிந்து கூட்டிப் பொருளுரைக்க, எ-று.

பட்டாங் கென்பது இயல்பு. அது மிகுதலுங் குறைதலுமில்லாத அளவென்று பொருளாயிற்று.

“சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை”

இதனுட் சுரைமிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை முயற்கு நீத்து எனத் துணித்து ஒட்டப், பொருள் விளங்கியவாறு கண்டு கொள்க. இது நாற்சீர்க்கண்ணே துணித்து ஒட்டியது.
“தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல்
வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி
அஞ்சனத் தன்ன பசலை
1 தணிவேமே
வங்கத்துச் சென்றார் வரின்.

இதன்பொருள்:--அஞ்சனத்தன்ன பைங்கூந்தல்! மாமை பொருந்தின மேனிமேல் தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட கோழிமுட்டை யுடைத்தாலொத்த பசலை, வங்கத்துச் சென்றார் வரில், தணிவேம், எ - று. இதனுள் எண் சீருள் ஒட்டிவந்தது. எண்சீரென வரையறுத்தமையால் அதன்மேற் சென்று ஒட்டாதென்க.

(10)


1. தணிவாமே என்பதும் பாடம்.