அடிமறியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். அடிமறியென்பதன் செய்தி சீர்நிலை திரியாது அடி நிலைமை திரிந்து தடுமாறும், எ - று.
| “சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளிர் ஆரணங் கினரே வார லெனினே யானஞ் சுவலே சார னாட நீவர லாறே.” |
இது, சாரல்நாட! நீ வருகின்ற நெறி சூரற்பம்பிய சிறுகான்யாறு, சூரர மகளிர் வருத்தஞ் செய்வார், வாராதொழி யென யான் அஞ்சா நின்றேன் என அடி மாறிப் பொருளுணர்த்தியவாறு கண்டுகொள்க.
அஃதேல், இதனை யாப்பிலக்கணத்துள் ஆராய்தல் வேண்டும், சொல் நிலை திரியாமையா லெனின், இது தொடர்மொழித் திரிபாகலான் ஈண்டுக் கூறப்பட்டதென்க.
(11)