மொழிமாற்று உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். மொழி மாற்றினது இயல்பு சொல் நின்ற நிலையை மாற்றி, முன்னும், பின்னும் பொருள் இயைய ஏற்கும்வழிக் கொளுவுதல், எ - று.
மேல், அடிமறி மொழிமாற்றென ஓதினமையானும், சுண்ண மொழி மாற்று ஈரடி எண்சீரென ஓதுதலானும், ஈண்டுச் சொன்னிலை மாற்றி யெனப் பொதுப்பட வோதினமையானும் ஓரடிக்கண் நின்ற சொல்லை அவ்வடிக்கண்ணும் பிறவடிக்கண்ணும் முன்பாயினும் பின்பாயினும் ஏற்கும் வழிக் கொளுவப்பெறும், எ - று.
| 1“பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அந்நா லைந்தும் மூன்றுதலை யிட்ட முன்னுறக் கிளந்த உயர்திணை யவ்வே”“பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அந்நா லைந்தும் மூன்றுதலை யிட்ட முன்னுறக் கிளந்த உயர்திணை யவ்வே” |
என்றவழி, மூன்று தலையிட்ட அந்நாலைந்தென ஓரடிக்கண் மொழி மாறி நின்றது. “ஆலத்து மேல குவளை குளத்துள வாலி னெடிய குரங்கு” என்றவழி, குரங்கு ஆலத்துமேல எனப் பிற அடிக்கண் மொழிமாறி நின்றது. பிறவும் அன்ன.
அஃதேல், பூட்டுவிற் பொருள்கோள், புனல்யாற்றுப் பொருள்கோள், தாப்பிசைப் பொருள்கோள், அளைமறி பரப்புப் பொருள்கோள், கொண்டு கூட்டுப் பொருள்கோள் எனவும் ஒரு சாராசிரியர் உரைப்பவால் எனின், அவற்றுள் யாற்றொழுக்கும், அளைமறிபாப்புப் பொருள்கோளும் திரிவின்றிப் பொருள்படுதலின் இயல்பாம், கொண்டுகூட்டு, சுண்ணமொழி மாற்றுள் அடங்கும். பூட்டுவிற் பொருள்கோள் மொழிமாற்றுள் அடங்கும். தாப்பிசைப் பொருள்கோட்கண் முன்னொரு சொல் வருவிக்க வேண்டுதலின். இது ‘பிரிநிலைவினை’ சூ-30 என்னுஞ் சூத்திரத்துள் அடங்கும். (13)
(13)
1. தொல், சொல், வினை 11-சூ.