ஒரு சொல்லடுக்கு

418.இசைநிறை யசைநிலை பொருளொடு புணர்தலென்
றவைமூன் றென்ப ஒருசொல் லடுக்கே.

ஒரு பொருண்மேல் ஒரு சொல்லடுக்கி வருவழிவரும்
வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். ஒருசொல் மேலடுக்கி வருஞ் சொல் இசை நிறையாகி யடுக்குதல், அசைநிலையாகி யடுக்குதல், பொருளொடு புணர்ந்து வருதல் என மூவகையென்ப ஆசிரியர், எ - று.

ஒரு சொல்லடுக்கு எனப் பொதுவாக ஓதினமையாற் பெயர் முதலாகிய நான்கு சொல்லும் அடுக்கப் பெறும் என்று கொள்க.

எ - டு.“துறக்குவ னல்லன் துறக்குவ னல்லன்
தொடர் வரை வெற்பன் துறக்குவ னல்லன்
தொடர்பு ளினையவை தோன்றின் விசும்பிற்
சுடருள் இருடோன்றி யற்று”

(கலி-41)

இதனுள் முந்துற்ற சொற்பொருள் உணர்த்திற்று. ஏனைய இசை நிறைக்கண் வந்தன.

இசைநிறையாவது பாட்டுக்குறித்து வரும். அசைநிலை செய்யுளின்பங் குறித்து வரும். 1‘குறங்கென மால்வரை யொழுகிய வாழை வாழைப், பூவெனப் பொலிந்த வோதி” என்றவழி, வாழை என்னுஞ் சொல்லிரண்டனுள் ஒன்று அசைநிலையாயிற்று. 2‘நின்றன நின்றன நில்லா வெனவுணர்ந் தொன்றின வொன்றின வல்லே செயிற் செய்க’ என்றவழி, நின்றன பலவாதலின் அடுக்கிவந்த சொல்லும் பொருள் குறித்து நின்றது. பிறவு மன்ன.

(26)


1. புறம்-67.

2. சிறுபாண்-20.