தொகைச் சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். வேற்றுமைப் பொருள் குறித்த தொகையும், உவமப் பொருள் குறித்த தொகையும், வினைத்தொழில் குறித்த தொகையும், பண்பு குறித்த தொகையும், உம்மைத் தொகை செய்யுந் தொகையும், அல்பொருள் குறித்த தொகையும் என அறுவகைப்படும் தொகைச்சொல்லது நிலைமை, எ - று.
தொகைச்சொல்லாவது:-பொருளுணர்த்துஞ் சொல்லாயினும், தொழிலுணர்த்துஞ் சொல்லாயினும் இரண்டு சொல் விட்டிசைத்து நில்லாது ஒட்டி நிற்பது. இஃது ஒட்டுப் பெயர் என்னுங் குறியும் பெறும். உதாரணம் வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும்.
(15)