வேற்றுமைத் தொகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். வேற்றுமை யியல்புடையன வேற்றுமைத் தொகை எ-று, வேற்றுமையியல என்றதனான், வேற்றுமைகட்கு ஓதிய செயப்படு பொருள் முதலாக இடம் ஈறாக வரும் பொருண்மைக்கண் தொகுஞ்சொல் வேற்றுமைத் தொகையாம் என்று கொள்க. முதல் வேற்றுமை பெயர்ப் பயனிலை கொள்வழியும் விட்டிசைத்தே நிற்றலானும், எட்டாவது விரிந்து நிற்றலானும் இவையிற்றை யொழித்து ஏனைய தொகுமென்று கொள்க. ஏகாரம் தேற்றேகாரம். அவை தொகுமாறு:--படையைப் பிடித்தகை, குழையையுடைய காது, குதிரையாற் பூட்டப்பட்ட தேர்; தாயொடு கூடி மூவர்; கடிசூத்திரத்திற்கு வைத்த பொன்; வரையினின்றும் வீழாநின்ற அருவி; யானையது கோடு, குன்றத்துக்கண் வாழா நின்ற கூகை என்பன. படைக்கை குழைக்காது, குதிரைத்தேர், தாய்மூவர், கடிசூத்திரப்பொன், வரையருவி, யானைக்கோடு, குன்றக்கூகை எனத் தொகும். நிலத்தைக் கடந்தான். வாளால் வெட்டினான், கொலைக்கு உடம்பட்டான், வரையினின்றும் பாய்ந்தான், குன்றத்துக்கண் இருந்தான் என்றவழி, இறுதி நின்ற சொல் தொழிலுணர்த்தாது அது செய்தார்க்குப் பெயராகி வந்துழி, நிலங் கடந்தான், வாள் வெட்டினான், கொலையுடம்பட்டான், வரைபாய்ந்தான், குன்றத்திருந்தான் என இரண்டு பெயரும் ஒட்டி ஒரு சொல்லாகிவரும். கள்ளையுண்டல், வாளால் வெட்டல், கொலைக்குடம்படுதல், வரையினின்றும் பாய்தல், மாடத்துக்கண்ணிருத்தல் என்பன-கள்ளுண்டல், வாள்வெட்டல், கொலையுடம்படுதல், வரைபாய்தல், மாடத்திருத்தல் எனத் தொகும். அஃதேல், இவ்வாறு வருவன உருபு தொகை என அடங்காவோவெனின், ஆண்டு அவ்வேற்றுமைகட்கு ஓதிய வாய்பாட்டால், தொழிலோடும், பெயரோடும் முடிவுழி, உருபு மாத்திரம் தொக்கு இரண்டு சொல்லாகி நிற்கும்; ஈண்டு ஒரு சொல்லாகிவரும், ஆறாவதன்கண் வரும் தொகை உருபு தொகையும், பொருட்டொகையும் என வேறுபாடின்றால் எனின், ஆண்டும் வேறுபாடு உள. மரக்கோடு என்றவழி ஒட்டுப்பட்டுப் பொருட்டொகையாகி நின்றது. மரத்தின் கோடு என்றவழி, உருபு தொகையாகி இரண்டு சொல்லாகி நின்றது. இவை சொல்நோக்கான் உணர்க. “வேற்றுமைத் தொகையே வேற்றுமையியல” என்றதனான் அவ்வேற்றுமை மொழிமாறி நிற்கு மாகலின், அத்தொகைச்சொல் மொழி மாறி நின்று ஒட்டுப்படுதலுங் கொள்க. மலையதிடை, மலையதகம் என்பன இடைமலை; அகமலை எனவும் வரும். பிறவும் அன்ன. அஃது அற்றாக. 1உலக முவப்ப,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,..................வாணுதல் கணவன் என்பது பல சொல்லாகி வந்து கணவன் என்பதனோடு முடிந்து கிடத்தலான், இரண்டு சொல் ஒரு தொகையாம் என்றல் பொருந்தாதால் எனின், எவ்வாறு வரினும் இரண்டு சொல்லாகி வந்தல்லது ஒட்டுப்படா தென்று கொள்க. அஃதாயவாறு என்னையெனின், பூத்தொடை போலக்கொள்க. அஃது இரண்டாயவாறு என்னையெனின், முற்பட இரண்டு பூவை எடுத்து ஒன்றாகக் கட்டும். அதன்பின் அவ்விரண்டும் ஒன்றாகி நின்ற தொடையோடேகூடப் பின்னும் ஒரு பூவை யெடுத்துக் கட்டும். அதன்பின் அம்மூன்று பூவும் ஒன்றாகக் கட்டப்பட்ட தொடையோடே பின்னும் ஒரு பூவை எடுத்துக் கட்டும். அவ்வாறு கட்டப்பட்ட தொடைகளைப் பின்னும் இரண்டு பின்னாகச் சேர்த்தது ஒன்றாக்கும். இவ்வாறே எல்லாப்பூவும் இரண்டொன்றாக இணைத்ததாம். சொற்றொடையும் ஒட்டுப்படுங்கால் அவ்வாறு வருமென்று கொள்க. ‘உலக முவப்ப,,,,,,,,,,,...வாணுதல் கணவன்’ என்பது இரண்டொன்றாக ஒட்டியவாறு என்னையெனின் உலகமென்பது உலகத்துள்ளார்க்குப் பெயராகி உவப்ப என்னும் செயவென்னெச்சத்தோடு முடிந்தது. வலனாக என்னும் எச்சத்துக்கண் ஆகவென்பது செய்யுள் விகாரத்தால் தொக்கு நின்றது. தொக்குநின்ற காலத்தும் அதற்கு இயல்பு முற்பட்ட நிலைமை யென்று கொள்க. என்போலவெனின், வாலுஞ்செவியும் இழந்த ஞமலியைப் பின்னும் ஞமலியென்றே வழங்கினாற்போல, உவப்ப வலனாக என்னும் செயவென்னெச்சமும், ஏர்பு என நிகழ்காலங் குறித்த செயவென்னெச்சமும் திரிதரு வென்னும் பெயரெச்சத்தோடு முடிந்தன. பலராலென்னும் மூன்றாம் வேற்றுமை ஏற்ற பெயர் உருபு தொக வருதல் என்னும் இலக்கணத்தால் தொக்குப் பலரென நின்றது. அது புகழப்பட்ட என்பதற்கு அடையாகி நின்றது. அடையெனினும் விசேடணம் எனினும் ஒக்கும். புகழப்பட்ட வென்னும் பெயரெச்சம், உண்சோறென்றாற்போலப் பொருண்மேல் வந்து வினைத்தொகையாகிப் புகழ்ஞாயிறென ஒட்டி ஒரு சொல்லாகி நின்றது. அது திரிதருவென்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று, ஞாயிறு என்பதற்கு முன்னுள்ள சொல்லெல்லாம் தொகுத்து நோக்க ஞாயிற்றிற்கு அடையாகி நின்றன. ஞாயிற்றை யென்னும் உருபு தொக்கு நின்றது. கடலின்கண்ணென்னும் உருபு தொக்கு நின்றது. கண்டாங்கு என்பது கண்டாற்போலும் என்னும் உவமப் பொருள் உணர நின்றது. இத்துணையும் உணர்த்தப்பட்டது உதய ஞாயிறுபோல என்னும் பொருண்மை. 2ஓவற என்பது-ஓவு ஒழிவு. அற என்பது இல்லையாக என்னுஞ் செயவெனெச்ச வாய்பாடு. அதற்கு ஓவு என்பது அடையாகி நின்றது. அறவென்பது இமைக்கும் என்னும் பெயரெச்சத்தோடு முடிந்தது. சேணின்கண் என்பது சேண் என உருபு தொக்கு நின்றது. அது விளங்கும் என்பதற்கு அடையாகிநின்றது. அவிர் என்பது விளக்கத்தின் மிகுதியைக் குறித்து வந்து ஒளியென்னும் பெயரோடு வினைத்தொகையாகி, அவிரொளியென ஒரு சொல்லாயிற்று. அது விளங்கு என்பதனோடு ஒட்டி வினைத்தொகையாகி, விளங்கவிரொளி யென ஒரு சொல்நீர்மைப்பட்டது. அஃது இமைக்கும் என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. உலகம் என்பது முதலாக இத்துணையுங் கூறப்பட்டது ஞாயிறு போல் விளங்கும் ஒளியென ஒளிக்கு அடை கூறுதலான், அவ்வொளியோடே எல்லாச் சொல்லும் முற்றி நின்றன. உறுநரை என்பது உறுநர் என உருபு தொக்கு நின்றது. தாங்கிய என்பது பெயரெச்சம். அதற்கு உறுநர் என்பது அடையாகி நின்றது. 3மதன் என்பது வலி. அது மத என்னும் உரிச்சொல் ஈறுதிரிந்து நின்றது. மதனை என்னும் ஐகாரம் தொக்கு நின்றது. 4நோன்மை-பொறை. திருவடி யடைவார் பலராதலின், அவரெல்லாரையும் பொறுக்க வல்ல தாளென்னும் பொருண்மைத்தாகி, நோன்றாளென வேற்றுமைத் தொகை யாகி ஒருசொன்னீர்மைப்பட்டது. அது மதனுடை நோன்றாள் என அடையடுத்து உறுநர்த்தாங்கிய என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. செறுநரை என்பது செறுநர் என உருபு தொக்கு நின்றது. தேய்த்த என்பது பெயரெச்சம். அதற்குச் செறுநர் என்பது அடையாகி நின்றது. 5செல் என்பது மழை. ளுஉறழ்தல் என்பது ஒத்தல். அது தடக்கை என்பதற்கு உவம நிலையின் அடையாகி நின்று, செல்லுறழ் தடக்கையென்று ஒரு சொன்னீர்மைப்பட்டது. அது தேய்த்த என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. மறு என்பது குற்றம், இல் என்பது இல்லாமை, குற்றமில் கற்பெனக் கற்பிற்கு அடையாயிற்று. வாள் என்பது ஒளி. அது ஒளி நுதல் என அடையடுத்து நின்று சினையிற்கூறு முதலறி கிளவி யாகி அதனை யுடை யாட்குப் பெயராகி நின்றது. அது மறுவில் கற்பின் வாணுதல் எனப் பண்புத் தொகையாகி ஒரு சொன்னடையாயிற்று. அது கணவன் என்னும் பெயரோடு கிழமைப் பொருட்டாகிய ஆறாம் வேற்றுமைத் தொகையாகி, மறுவில் கற்பின் வாணுதல் கணவன் என இரண்டாம் வேற்றுமைத் தொகையாகிய ஒரு பெயராயிற்று. அது செல்லுறழ் தடக்கைக் கணவனென இரண்டாம் வேற்றுமைத் தொகையாகி ஒருசொன்னீர்மைப்பட்டது, அது மதனுடை நோற்றாள் என்பதனோடும் அவ்வாறே ஒட்டி நோன்றாட்டடக்கைக் கணவன் என ஒருசொன்னடை யாயிற்று. அது சேண்விளங் கவிரொளி என்பதனோடும் அவ்வாறே யொட்டிச் சேண் விளங் கவிரொளி நோன்றாட்டடக்கைக் கணவன் என ஒருசொன்னடையாயிற்று. இவ்வாறே சொன்னிலையுணர இரண்டு சொல்லே தொகையாகியவாறு கண்டுகொள்க. 6எல்லாத் தொகையும் ஒருசொன்னடைய, என்றோதினமையானும் ஆசிரியன் கருத்திதுவென்று கொள்க. (16)
1. திருமுருகாற்றுப்படை (1-6). 2. ஓவற = ஒழிவற: 3. மதன் = அறியாமை (நச்) அழகு - வேறுரை. 4. நோன்றாள்-வலியினை யுடைய தாள், (நச்). 5. மேகம் (வேறுரை) இடி (நச்). 6. தொல். எச். சூத். 23.
|