உவமைத்தொகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். உவம இயல்புடையன உவமத் தொகையாம்,. எ - று. உவமையாவது தொழிலான் ஆதல், பயனான் ஆதல், வடிவினான் ஆதல், வண்ணத்தினான் ஆதல் இதுபோலும் இது என ஒன்றோடொன்று உவமை கூற வருவது. அவ்வுவமையும், உவமிக்கப்படும் பொருளும் விட்டிசைத்து நில்லாது செறிய நிற்பது உவமைத் தொகையாம், எ - று. புலியன்ன பாய்த்துள், மழையன்ன வண்கை, துடியன்ன இடை, பொன்னன்னமேனி என்பன புலிப்பாய்த்துள், மழை வண்கை, துடியிடை, பொன்மேனி எனவரும், பிறவும் அன்ன. இவை விரியுங்காலத்து புலியை யொக்கும் பாய்த்துள், மழையை யொக்கும் வெண்கை எனவும் விரிதலானும். காப்பினொப்பின் என இரண்டாவதன்கண் ஒப்பாதலானும் உவமைத்தொகை யென்பதொன்றில்லை. இவையும் வேற்றுமைத் தொகையாம் எனின், ஒக்கும். மழையன்ன வண்கை யென்றவழி, இரண்டாமுருபு விரியாமலும் தானின்று உவமிக்கப்படும் பொருளைக் காட்டுதலின், இவ்வாறு வருஞ் சொற்களை நோக்கி உவமத் தொகை யென்றார். அதனானேயன்றே, உவம இயல்புடையன உவமத் தொகையெ ஓதுவாராயினர். இன்னும், உவம வியல உவமத் தொகை யென்றதனான் உவமையும், உவமிக்கப்படும் பொருளும் மாறி நிற்றலும் கொள்க. முகத்தாமரை, கைம்மாரி எனவரும். இவை உருவகம் அன்றோ வெனின், உருவத் தொகையென் றோதாமையானும், பண்புத்தொகையுள் அடங்காமையானும் உவமையுள் அடங்கும். இத்தொகையை வேற்றுமைத் தொகையொடு சேர ஓதியவதனான், அதனோடு இதற்கு ஒற்றுமை யுண்டென்று கொள்க. (17)
|