வினைத்தொகை

410.வினையின் றொகுதி காலத் தியலும்.

வினைத்தொகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். வினையின் தொகுதி காலச் சொல்லோடே நடக்கும், எ - று.

வினைச்சொல்லாவது தொழிலுங், காலமும், பாலும் உணர்த்தலின், பாலுணர்த்துஞ் சொல் முற்றுச் சொல்லாகி நின்று தொகைநிலை யாகாமையானும், பால் காட்டாத வினையெச்சம், பெயரெச்சம் என்னும் இரண்டினுள்ளும், வினையெச்சம் முற்று வினைச்சொல்லோ டல்லது முடியாமையானும், ஈண்டுத் தொகுவதும் விரிவதும் பெயரெச்சம் என்று கொள்க. அது தொகுங்காலத்துக் காலப்பொருளையுணர்த்துஞ் சொல்லே தொகுவதும் விரிவதும் என்று கொள்க. தொழிலும், பொருளும் விட்டிசைத்து நில்லாது ஒற்றுமைப்பட்டதனை வினைத்தொகை யென்றார்.

எ - டு. கொல்லும் யானை, கொன்ற யானை; உண்ணும் நீர்; உண்ட நீர்; அரியும் வாள், அரிந்த வாள்; செல்லும் இடம், சென்ற விடம், உண்ணும்பொழுது, உண்டபொழுது; கொல்லுங் கொலை, கொன்ற கொலை என்பன கொல்யானை, உண்ணீர், அரிவாள், செல்லிடம், உண்பொழுது, கொல் கொலை எனத் தொகும். பிறவும் அன்ன.

(18)