பண்புத்தொகை

411.வண்ணத்தின் வடிவின் அளவிற் 1சுவையின்
அன்ன பிறவும் அதன்குணம் நுதலி
யின்ன திதுவென வரூஉ மியற்கை
யென்ன கிளவியும் பண்பின் றொகையே.

பண்புத்தொகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். வண்ணம், வடிவு, அளவு, சுவை யென்பனவற்றினும், அத்தன்மைய பிறவுமாகி, ஒரு பொருளினது குணத்தைக் கருதி இன்னது இது என ஒன்றையொன்று விசேடித்து வரும் இயல்பினையுடைய எல்லாச் சொல்லும் பண்புத் தொகையாம், எ - று.

கரியது குதிரை. 2வட்டப்பலகை, நெடியது கோல், திவ்விது கரும்பு என்பன கருங்குதிரை, வட்டப்பலகை, நெடுங்கோல், தீங்கரும்பு எனத் தொகும்.

அன்னபிறவும் என்றதனான், தண்ணீர், வெந்நீர் என்பன முதலாயின கொள்க.

அஃதேல் இவை, கரிய குதிரை, நெடிய கோல் எனப் பெயரெச்ச வாய்பாட்டானும், பண்பு பற்றி வருஞ் சொல் வினைக்குறிப்பாகி முடிதலானும் வினைத் தொகையுள் அடங்கு மெனின். பண்புத் தொகை யொருவாய் பாட்டான் விரிக்கப்படாதென்பது எழுத்ததிகாரத்துட் கூறுதலிற் பெயரெச்ச வாய்பாடும் வரும் வினைக்குறிப்பாத லானேயன்றே, வினைத்தொகையோடு சேர ஓதுவாராயிற்று என உணர்க.3

கருமையை யுடைய குதிரையென வேற்றுமைத் தொகையாயும் அடங்குமால் எனின், இன்னதிதுவென ஒன்றையொன்று விசேடித்து வருதல் வேண்டும். அவ்வாறு வருங்கால் வேற்றுமைத் தொகையாகாதென்க. வேற்றுமைத்தொகை, உவமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை என்பன தம்முள் ஒரு புடை ஒப்புமையுடையவாதலிற், பாணினியார் தற்புருட சமாசம் என்று குறியிட்டார்.

இனி, “இன்ன திதுவென வரூஉ மியற்கை என்ன கிளவியும்” என்றதனாற், பண்புபற்றி வருதலேயன்றிப், பெயரினால் ஒன்றையொன்று விசேடித்துவந்து ஒட்டுப்படினும், பண்புத்தொகையாம் என்று கொள்க. வாணிகச்சாத்தன், சாரைப்பாம்பு எனவரும். ஆயன் சாத்தன், ஆசிரியன் நல்லந்துவன் என எழுவாயும், பயனிலையுமாகி வருதலின்றி, ஒட்டுப்படாத நிலைமையவாயினும், முதற்பெயர் விசேடண மாகிவரின், அதுவும் பண்புத் தொகையாமென்று கொள்க.

(19)


1. சுவையி னென்று என்பது பிறர்கொண்ட பாடம்.

2. வட்டமானது பலகை-இளம்பூரணம்.

3. ஈங்கு ஏதோ பிழைபாடுளதுபோலும்.