நிறைப்பெயர்க் கிளவி என்பது நிறுக்கப்பட்ட பொருளைக் குறியாது நிறையின் பெயராகி வருவது. அவை குன்றி, மஞ்சாடி, கால், அரை, கழஞ்சு என்பன.
எண்ணின் பெயராவது எண்ணப்பட்ட பொருளைக் குறியாது, எண் தன்னைக் குறித்து நிற்பது. அவை ஒன்று, இரண்டு, பத்து, நூறு என்பன.
அவ்வறு கிளவியும் கண்ணிய நிலைத்தே உம்மைத்தொகையே என்பது அறுவகைப்பட்ட பெயரையுங் குறித்த நிலைமைத்து உம்மைத்தொகை, என்றவாறு.
வரையறுத்து ஓதாமையால், இரண்டும், பலவும் வரப்பெறும் என்று கொள்க. கபிலனும், பரணனும், வந்தார் எனற்பாலது கபில பரணர் வந்தார் எனவரும், ஆடலும் பாடலும் தவிர்ந்தார் என்பது ஆடல் பாடல் தவிர்ந்தார் எனவரும், பார்ப்பாரும் சான்றாரும் வந்தார் எனற்பாலது பார்ப்பார் சான்றார் வந்தார் எனவரும். தூணியும், பதக்கும் குறையும் எனற்பாலது தூணிப்பதக்குக் குறையும் எனவரும். பதின்மரும், ஐவரும் போயினார் எனற்பாலது பதினைவர் போயினார் எனவரும். கழஞ்சும், அரையுங் குறையும் எனற்பாலது கழஞ்சரை குறையும் என வரும், பத்தும் இரண்டுங் குறையும் எனற்பாலது பன்னிரண்டு குறையும் எனவரும்.
இனி, புலிவிற்கெண்டை, அந்தணரரசர்வணிகர், தூணிப்பதக்கு முந்நாழி, நூற்றிருபத்தைவர், மாகாணியரைக்காணி, நூற்று முப்பது மூன்று எனவும் வரும், பிறவும் அன்ன.
ஏற்புழிக் கோடல் என்பதனான் எண்ணும்மையே ஈண்டுத் தொகுவதென்று கொள்க.
இடைச்சொல் ஓத்தினுள்ளும் உம்மை தொகும் என்றாராலெனின். ஆண்டு விரிந்துநின்ற சொல்லின்கண் உம்மை தொகவும் பெறுமென்றார். ஈண்டு ஒட்டிநிற்கும் சொல்லினது இலக்கணங் கூறினாரென்க.
(20)