அன்மொழித்தொகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். பண்பு தொகவரும் பெயர்க்கண்ணும், உம்மை தொக்க பெயர்க்கண்ணும், வேற்றுமை தொக்க பெயர்க்கண்ணும், இறுதிக் கண்ணின் றியலும் அன்மொழித் தொகை, எ - று.
அல்லாத மொழி தொகுதலின், அன்மொழித் தொகையாயிற்று. இம்மூவகைத் தொகையினும் ஈற்று நின்றியலும் என்றதனான், முன்னும் பின்னும் நின்ற இரண்டு சொல்லானும் உணரப்படு பொருண்மை யுடைத்து அன்மொழித் தொகை என்று கொள்க.
எ - டு. 1“கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல, தில்லை நிலக்குப் பொறை” என்றவழிக், கடுங்கோல் என்பது அஃதுடைய அரசர்க்குப் பெயராகி வருதலின், அன்மொழித் தொகையாயிற்று. கோலிற்கு அடையாகிநின்ற கடுமையும் அரசன்மேல் ஏறியவாறு கண்டு கொள்க. இது பண்பு பற்றி வந்தது.
தகர ஞாழல் என்பது உம்மைத் தொகை. இவையிற்றை யுறுப்பாக அமைக்கப்பட்ட சாந்தினையும் தகர ஞாழல் என்பவாகலின். அன்மொழித் தொகையாயிற்று. தூணிப்பதக்கு என்றவழி அளவிற்குப் பெயராதலன்றி, அளக்கப்படும், பொருளுக்கும் பெயராகியவழி, அன்மொழித் தொகையாம், இவை யிரண்டு சொல்லும் அன்மொழித் தொகைமேல் ஏறியவாறு கண்டு கொள்க. இஃது உம்மைபற்றி வந்தது. பொற்றொடி என்பது வேற்றுமைத் தொகை. அதனையுடையாட்குப் பெயராகியவழி அன்மொழித் தொகையாம். ஈண்டுத் தொடிக்கு அடையாகி நின்ற பொன். தொடியை யுடையாளது செல்வத்தைக் காட்டுதலின், இவ் விரண்டு சொல்லும் அதனையுடையாளைக் குறித்தவாறும் அறிந்துகொள்க.
துடியிடை எனவும், தாழ்குழலெனவும் உவமைத் தொகைப் புறத்தும், வினைத்தொகைப் புறத்தும் அன்மொழித் தொகை வருமாலெனின், துடி என்பதூஉம், தாழ் என்பதூஉம் இடை, குழல் என்பவற்றிற்கு அடையாகி வரினல்லது, அவற்றையுடையாட்குப் பெயராகுங்கால், இறுதி நின்ற பெயர்ப் பொருண்மைவந்து ஏனைய வாராமையின், ஆகுபெயரெனினல்லது அன்மொழித்தொகை யாகாதெனக் கொள்க. அதனானே யன்றே இருபெயரொட்டும் என ஆகுபெயர்க்கண் எடுத்தோதுவாராயிற்று என உணர்க.
(21)
1. குறள்-570.