தொகைச் சொற்களில் பொருள் சிறக்கும் இடம்

414.அவைதாம்,
முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும்
இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையலும்
அம்மொழி நிலையா தன்மொழி நிலையலும்
எனநான் கென்ப பொருணிலை மரபே.

மேற் சொல்லப்பட்ட தொகைக்கட் பொருள் நிற்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்ட தொகைச் சொற்கள் தாம் முன்மொழிக்கண் பொருள்நிற்றலும், பின்மொழிக்கண் பொருள் நிற்றலும், இருமொழிமேலும் பொருள் நிற்றலும், அத்தொகை மேற் பொருள் நில்லாது பிறமொழிக்கண் பொருள் நிற்றலும் என நால்வகைப்படும் என்ப: பொருள் நிற்கும் மரபு. எ - று.

அவைதாம் என எல்லாத் தொகையுஞ் சுட்டுதலான், அவற்றுள் இவ்விலக்கணம் அவ்வத்தொகைக் கேற்றவழிக் கொள்ளப்படும்.

எ - டு. மாம்பழந் தின்றான் என்றவழித், தின்னப்பட்டது பழமாதலின், அத்தொகைச்சொன் முன்மொழிக்கண் பொருள்நின்றது.

“இடைமுலைக் கிடந்து நடுங்க லானிர்” என்றவழிக் கிடக்கப் பட்டது முலையிடை யாதலின், பின்மொழிக்கண் பொருள் நின்றது. குதிரைத் தேரோடிற்று என்றவழி, குதிரை யோடத் தேரு மோடுதலின், இருமொழிமேலும் பொருள் நின்றது. பொற்றொடி வந்தாள் என்ற வழிப், பொற்றொடியை அணிந்தாள்மேற் பொருள் நிற்றலின், அம் மொழியல்லாத மொழிமேற் பொருள் நின்றது. இவை நான்கும் வேற்றுமைத்தொகை. ஏனைத் தொகைக்கண்ணும் பொருள் நிற்குமாறு ஏற்பனவற்றுட் கண்டுகொள்க.

(22)