குறிப்பு மொழி எனப் பெயர்பெறுவன

417.வாரா மரபின வரக்கூ றுதலும்
என்னா மரபின எனக்கூ றுதலும்
அன்னவை எல்லாம் அவற்றவற் றியல்பான்
இன்ன என்னுங் குறிப்புரை யாகும்.

ஒருசார் சொற்களுக்குக் குறியிடுதல் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். வாராமரபினவற்றை வருமாகக் கூறுதலும், என்னா மரபினவற்றை என்றனவாகக் கூறுதலும், அத்தன்மைய பிறவுமெல்லாம் அவற்றவற்றியல்பினான், இத்தன்மைய என்னுங் குறிப்புரையாகும், எ - று.

வாரா மரபின என்றதனாற் செலவு, வரவு என்பன கொள்ளப்படும். என்னாமரபின என்றதனான் நினைத்தலும், சொல்லுதலும் செய்தலும் கொள்ளப்படும். அன்னவை எல்லாம் என்றதனாற் காணாமரபின, கேளாமரபின என்பன கொள்ளப்படும். இவ்வாறு சொல்லுதல் குற்றமாயினும், சொல்லுவான் குறிப்பு வேறாதலிற் குறிப்புமொழியாயிற்று. இதனானே சில சொற்களுக்குக் குறிப்பு மொழியெனவும் குறியிட்டாராம்.

எ - டு. அம்மலை வந்து இதனொடு பொருந்திற்று. மலை வருதலின்மையின், அதுவும் இதுவும் ஒன்றிக்கிடந்தது என்னும் பொருண்மை குறித்து இவ்வாறு சொல்லப்பட்டது. “சென்றதுகொல் போந்தது கொல் செவ்வி பெறுந்துணையும், நின்றதுகொல் நேர்மருங்கிற் கையூன்றி-முன்றில், முழங்கும் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்கு, உழந்துபின்

சென்றவெனெஞ்சு.” இதனுள் வந்தன எல்லாங் குறிப்பு மொழியென்று கொள்க.

1‘அன்னச்சேவ லன்னச்சேவல்’ என்னும் புறப்பாட்டினுள் ‘இரும் பிசிராந்தை யடியுறையெனின்’ என்பது அன்னச்சேவலைக் குறித்துக் கூறுதலிற், சொல்லா மரபின சொல்லுமாகவந்த குறிப்பு மொழி. ‘நீல முண்டதுகில்’ நீலம்பற்றின துகில் என்னும் பொருண்மை குறித்து உண்டதாகக் கூறப்பட்டது. பிறவுமன்ன.

(25)


1. புறம்-67.