விரைசொல் அடுக்கிற்கு வரையறை

420.

விரைசொல் அடுக்கே மூன்றுவரம் பாகும்.

குறிப்புப் பொருள் உணர்த்தும் ஒருசொல்லடுக்கிற்கு
வரையறை யுணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்.விரைவுப் பொருண்மை குறித்த ஒருசொல்லடுக்கிற்கு எல்லை மூன்றாகும், எ - று.

எ - டு. பாம்பு பாம்பு பாம்பு, தீ தீ தீ இவற்றுள் முந்துற்றன பொருள் உணர்த்தின. ஏனைய பொருளிலவாயினும், விரைதல் என்பது குறித்தலிற், பொருளொடு புணர்ந்த அடுக்காயின.

இசை நிறைக்கும், பொருளொடு புணர்தற்கும் எல்லை கூறி, அசை நிலை யடுக்கிற்கு எல்லை கூறாமையின், அஃது இரண்டல்லது வரப்பெறாதென்று கொள்க.

(28)