எச்சக் கிளவியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். நெறிப்படத் தோன்றும் எஞ்சுபொருள் உணர்த்துங் கிளவி: பிரிநிலை முதலாக இசையீறாக ஓதப்பட்ட பத்தும், எ - று.
எஞ்சுபொருட் கிளவியாவது சொல்லாதொழிந்த பொருளை இனிது விளக்குஞ் சொல். நெறிப்படத் தோன்றுதலாவது வாக்கியமாகிய தொடர் மொழிக்கண் முன்னும் பின்னும் நின்ற சொல்லை நெறிப்படுத்தற்கு ஆண்டுத் தோன்றுதல். அது புலப்பட நில்லாமையின் எச்சமாயிற்று.
பிரிநிலை எச்சமாவது பல பொருளில் ஒன்று பிரிந்தவழிப் பிரிக்கப்பட்ட பொருண்மையுந் தோன்ற நிற்பது.
வினையெச்சமாவது ஒரு வினைச்சொல் எஞ்சி நிற்பது. பெயரெச்சமாவது ஒரு பெயர்ச்சொல் எஞ்சி நிற்பது.
அஃதேல், வினையெச்சம் பெயரெச்சம் என்பன வினையியலுள் ஓதப்பட்டனவலவோ எனின், ஆண்டு ஓதப்பட்டன பெயரையும் வினையையும்
ஒட்டி நின்றியலும், ஈண்டையன அன்னவல்லவாமாறு உதாரணத்தால் விளங்கும்.
எ - டு. ஒழியிசை யெச்சமாவது சொல்லப்பட்ட பொருளை யொழியச், சொல்லாதொழிந்து நின்ற பொருளுந் தோன்ற நிற்பது.
எதிர்மறை யெச்சமாவது ஒரு பொருளைக் கூறியவழி, அதனின் மாறுபட்ட பொருண்மையும் அதனானே உணர நிற்பது.
உம்மையெச்சமாவது உம்மை கொடுக்கவேண்டும் வழி, அஃது எஞ்சி நிற்றல்.
என என்னெச்சமாவது எனவென்று சொல்ல வேண்டும்வழி, அச்சொல்லெஞ்சி நிற்பது.
சொல்லெச்சமாவது ஒரு சொல்லினான் பொருளை விதந்தோதியவழி, அவ்விதப்பினானே பிறிதுமொரு பொருளைக் கொள்ளுமாறு நிற்பது.
குறிப்பெச்சமாவது சொற்படு பொருளன்றிச், சொல்லுவான் குறித்த பொருள் எஞ்சி நிற்பது.
இசையெச்சமாவது ஒரு சொற் றனக்குரிய பொருளன்றிப் பிறிதுமொரு பொருளை இசைக்குமாறு வருவது.
இவையெல்லாம் வழக்கினும், செய்யுளினும் வந்து பொருளை விளக்குதலின் எடுத்தோனினார்.
உதாரணம் தத்தம் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும்.