பிரிநிலை யெச்சம் முற்றுப்பெறுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள், பிரிநிலையாகிய எச்சம் அதன்கணின்றும் பிரிக்கப்பட்ட பொருளொடு தொடர்ந்து முடிவு பெறும், எ - று. எ - டு. இவன் கல்வியுடையன் என்றவழிச், சொல்லுவான் இவ்வவையத்தாருள் எனக் கருதினானாயின், இவ் வவையத்தாருள் என்பது எஞ்சி நின்று பிரிநிலை யெச்சமாயிற்று. இவட்குக் கண்ணழகிது என்றவழி, மற்றுள்ள உறுப்புக்களின் என்பது எஞ்சிநின்றது. இவை, பிரிக்கப்பட்ட பொருளொடு தொடர்பு பட்டு முற்றுப்பெற்றவெனக் கொள்க. (32)
|