வினையெச்சத்திற்கு முடிபு

425.வினையெஞ்சு கிளவிக்கு வினையும் குறிப்பும்
நினையத் தோன்று முடிபா கும்மே
ஆவயிற் குறிப்பே ஆக்கமொடு வருமே.

வினையெச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். வினையெச்சமாகவுடைய சொல்லிற்கு வினையும், வினைக்குறிப்பும் நினையத் தோன்றிய முடிபாகும். ஆண்டு, வினைக் குறிப்பு ஆக்கச் சொல்லோடு அடுத்துவரும், எ - று.

நினையத் தோன்றும் என்றதனான், ஆராயத் தோன்றுமென்று கொள்க. எனவே, வினையியலுட் கூறிய வினையெச்சம் ஆராய்தல் வேண்டாமையின், அஃதன்றென்று கொள்ளப்படும்.

எ - டு. 1“அழுக்கா ருடையார்க் கதுசாலு மொன்னார், வழுக்கியுங் கேடீன் பது” என்பதனுள், கேடுபயத்தற்கு அழுக்காறு தானே யமையும், பகைவர் கேடுதருதல் தப்பியும் வரும் எனப் பொருளுரைக்க வேண்டுதலின், வரும் என்பது எஞ்சிநின்றது. 2“அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன், பெற்றான் பொருள்வைப் புழி” என்பதற்குப் பொருள் அற்றாரது குணங்களை அழிக்கும். பசியைப் போக்குவது செய்ய ஒருவன்தான் தேடின பொருள் வைத்தற்கு இடம் பெற்றான் ஆம் என உரைக்க வேண்டுதலின், ஆமென்னும் வினைக்குறிப்பு எஞ்சி நின்றது.

(33)


1. குறள்-165.

2. குறள்-226.