உம்மை எச்சத்திற்கு முடிபு

429.உம்மை எச்சம் இருவீற் றானும்
தன்வினை ஒன்றிய முடிபா கும்மே.

உம்மையெச்சம் முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். உம்மையாகிய எச்சம் இரண்டு வேறுபாட்டின் கண்ணும் தன்வினையொடு பொருந்திய முடிபாகும், எ - று.

இருவீறாவன:--முன்னின்ற சொல்லும், பின்னின்ற சொல்லும். தன்வினையாவன;--இரண்டு சொல்லின்கண்ணும் உடன்பாடாகியும், மறையாகியும் வரும் தொழிலுங் காலமும் ஒத்த வினைச்சொல். அது உம்மைக் கேற்ற வினையாதலின் தன்வினை யென்றார். ஒன்றிய முடிபாவது அவ்வினையொடு பொருந்திய முடிபாகும் என்றவாறு. ஏனை யெச்சம்போலத் தான்வந்து முடிதலேயன்றித் தான்வந்தாலும் சார்ந்த வினையொடு கூடியல்லது பொருட்கு முடிபாகாது என்றவாறு.

எ - டு. சாத்தனும் வந்தான், கொற்றனும் வந்தான் எனற்பாலன--சாத்தன் வந்தான், கொற்றன் வந்தான் எனவரின், ஆண்டு, உம்மை எஞ்சி நின்றதென்க.

இருவீற்றானும் என்ற உம்மையாற் றனிவரினும் என்றுகொள்க. “வதுவை வந்த என்பறழ்க்குமரி யிருதோ டோழர்பற்ற” என்றவழி, இருதோளும் என்னும் உம்மை எஞ்சிநின்றது.

இடைச்சொல் லோத்தினுள் “உம்மை எண்ணி னுருபுதொகல் வரையார்” எனவும், இவ்வோத்தினுள் “உம்மைத் தொகை” எனவும் ஈண்டு உம்மை யெச்சம் எனவுங் கூறினாராதலின், அவற்றின் வேறுபாடு புலப்பட்டின்றாலெனின், பல பொருளை யெண்ணி ஒரு வினையான் முடிக்கும் வழிச், சொற்றொறும் உம்மை கொடுத்து, இடைநின்ற ஒன்றானும் இரண்டானும்

சொல்லின்கண் உம்மை கொடாதவழி, உம்மை யெண்ணாகுமோ ஆகாதோவென நின்ற ஐயங்கொளற் குரித்து; ஆண்டு “உம்மை யெண்ணின் உருபு தொகல் வரையார்” என்று ஓதுதலின், உம்மை ஆண்டுத் தொக்கதென்க. இரண்டானும், பலவானும் பெயரை யடுக்கி, ஒரு சொற் போல ஒருவினையான் முடிக்கும் வழி, உம்மைத்தொகையென்க. தனித்தனி வினைகொண்டு உம்மை பிரிந்து நின்றே பொருள்படும் சொற்கள் செய்யுளகத்து எஞ்சி நின்றதனை எஞ்சிற்றென்க.

அஃதற்றாகக், காலமும் வினையும் ஒத்தல்வேண்டும் என்ற தென்னை? சாத்தன் வந்தான், கொற்றன் வரும் எனவும், சாத்தன் வந்தான், கொற்றன் போம் எனவும், காலமும் வினையும் ஒவ்வாமையும் வருமாலெனின், அவை உம்மை யெஞ்சிய சொல்லன்மை வருகின்ற சூத்திரத்தான் விளங்கும்.

(37)