மேற் சொல்லப்பட்ட உம்மைப் பொருட்கண் வரும்
வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். உம்மைப் பொருட்கண் உம்மை கொடாது செஞ் செல்லாகிவரின், அவற்றுள் நிகழ்காலத்தொடு எதிர்காலமும், இறந்தகாலத்தொடு எதிர்காலமும் மயங்குதல் நீக்கார்: முறை பிறழாமல் நிற்கும் வழி, எ - று.
எ - டு. சாத்தன் வாராநின்றான், கொற்றன் வருவன், போம்; சாத்தன் வந்தான், கொற்றன் வருவன், போம் என இவை உம்மை கொடாமற் பொருள்பட்ட வாறும், காலமுந் தொழிலும் மயங்கியவாறும் கண்டுகொள்க.
அஃதேல், சாத்தனும் வாரா நின்றான், கொற்றனும் வருவன் என உம்மை கொடுத்தும் வழக்கு நிகழுமாலெனின், உம்மை கொடுக்கின்றது பொருள் வேற்றுமை உணர்தற்கன்றே; அது கொடாக்காலும் பொருள் இனிது விளங்குமாயின், கொடுத்ததனாற் பயனின்றென்க. இவ்வாறு செய்யுளகத்துவரின், இசைநிறைத்தற் பொருட்டு வந்ததென்க.
(38)