எனவெனெச்சத்தின் முடிபு

431.எனவென் னெச்சம் வினையொடு முடிமே.

எனவென் எச்சமுடிபு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். எனவென்று சொல்லப்பட்ட எச்சம் வினையொடு முடியும், எ - று. உம்மையாற் பெயரொடும் முடியுமென்று கொள்க. முடிதலாவது அவற்றைச் சார்ந்து நின்று பொருளை உணர்த்துதல். முடிதல் எனினும், தொடர்த லெனினும் ஒக்கும்.

எ - டு.1“வீடுணர்ந் தோர்க்கும் வியப்பாமா லிந்நின்ற, வாடன் முதியாள் வயிற்றிடங்--கூடார், பெரும்படை வெள்ளம் நெரிதரவும் பேரா, இரும்புலி சேர்ந்த விடம்” என்பதனுள் இரும்புலி சேர்ந்த விடமென வியப்பாமா லெனப் பொருளுரைக்க வேண்டுதலின், என என்பது எஞ்சி நின்று வியப்பென்பதனோடு தொடர்ந்தது. இது வினை. ‘பிரி நிலை வினையே’ (31) என்னுஞ் சூத்திரத்துள், ‘குறிப்பே யிசையே யாயீரைந்தும்’ என்றவழிக், குறிப்பே, இசையே யென அவ் வீரைந்துமெனப் பொருளுரைக்க வேண்டுதலின், என என்பது எஞ்சி நின்றது, ஈரைந்தென்னும் பெயரோடு முடிந்தது.

(39)


1. புறப்பொ. வஞ்சிப்-19.