ஏனை எச்சங்கட்கு முடிபு

432.எஞ்சிய மூன்றும் மேல்வந்து முடிக்கும்
எஞ்சுபொருட் கிளவி இலவென மொழிப.

சொல்லெச்சத்திற்கும், குறிப்பெச்சத்திற்கும், இசை
யெச்சத்திற்கும் உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேலதிகரிக்கப்பட்ட பத்தினுள்ளும் முடிவு சொல்லாது ஒழிந்த மூன்று சொல்லும் வந்து முடிக்கும் சொற்களை எஞ்சிநிற்ற லில, எ - று.

எனவே, முந்துற்ற ஏழு சொல்லும் வந்து முடிக்கும் சொற்களையுடைய என்பதூஉம், இவை நின்றவாற்றாற் பொருள் வேறுபடூஉம் என்பதூஉங் கூறியவாறாம் என்றவாறு. இதன் பொருள் வருகின்ற சூத்திரத்தான் விளங்கும்.

(40)