இனிக் குறிப்பெச்சம் உணர்த்தற்பாலது. அது ‘தெரிபு வேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும், இருபாற்றென்ப பொருண்மை நிலையே’ எனப் பெயரியலுள் (சூ. 13) ஓதுதலால், அதன்கண் சில சொற்களைமரபு வழு வமைக்க வேண்டுதலின், அவையமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். அவைக்களத்து வழக்கமல்லாத சொல்லை மறைத்துப் பிறவாய்பாட்டான் மொழிக, எ - று.
எ - டு. மறைத்துச் சொல்லுதல் இருவகைப்படும்; மங்கல மரபினாற் கூறுதலும், இடக்கரடக்கிக் கூறுதலுமென, மங்கல மரபினாற் கூறுவது:--செத்தாரைத் துஞ்சினாரென்றும், ஓலையைத் திருமுகம் என்றுங் கூறுதல். இவை அவைக்களத்துப் பட்டாங்குக் கூறிற் குற்றம்பயக்குமாதலின், அவ்வாறு கூறினார் என்க. இடக்கரடக்கிக் கூறுதல் கண்கழீஇ வருதும், கால்மேல் நீர் பெய்தும் எனப் பிறவாய்பாட்டான் வரும் பொருண்மையை மறைத்துச் சொல்லுதல். இவை வேறொன்றைக் குறித்துக் கூறுதலிற் குறிப்பெச்சமாயின.
(43)