இதுவும் ஒருசார் குறிப்பெச்சம் உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். ஈ, தா, கொடு என்னுஞ் சொற்கள் ஒரு பறவையின் பெயரும், தொழிற் பொருண்மையும், கொடுமையும் ஆதலன்றி, இரப்போன் கூற்றாதலும் உரிய. அவற்றுள், ஈ என்பது இழிந்தோன் கூற்று என்பதூஉம், தா என்பது ஒப்போன் கூற்று என்பதூஉம், கொடு என்பது உயர்ந்தோன் கூற்று என்பதூஉம் உணர்த்தும், எ - று.
இச் சொற்கள்தம்மானே இழிந்தான், ஒப்பான், மிக்கான் என்னும் பொருண்மை, எஞ்சிநிற்றலிற் குறிப்பெச்சமாயிற்று.
1. இவற்றை நான்கு சூத்திரங்களாகக் கொள்வர் ஏனை உரையாசிரியர்கள்.
2. ‘ஆகிடனுடைத்தே’ என்பது இளம்பூரணர் பாடம்.