அதிகார முறையான் இசையெச்சமாமாறு உணர்த்துதல்
நுதலிற்று.
இ - ள். பெயர்நிலைக் கிளவிகளினாகுஞ் சொல்லும், திசை நிலைக் கிளவிகளினாகுஞ் சொல்லும், பழமைத்தாகி நெறிப்படவருஞ் சொல்லினாகுஞ் சொல்லும், பொருணிலை மயக்கினாகுஞ் சொல்லும், மந்திரப் பொருள்வயினாகுஞ் சொல்லும் அவ்வனைத்தும் இச் சொற்குப் பொருள் இது வென்னும் நியமம் இல, எ - று.
எனவே, தன்பொருள் ஒழியப் பிறிது பொருளும்படும் என்றவாறாம். ஒருசொல் இரண்டுபொருள்பட நின்றவழி, ஒரு பொருளை யுணர்த்தும் இசை எஞ்சி நிற்குமன்றே. அஃது இசை யெச்சமாவது என்று கொள்க. ஆகுஞ்சொல் என்றமையான், ஏற்பன கொள்ளப்படும்.
இசையெச்சம் ஐந்து வகையென்பது போந்தது. அவற்றுள், பெயர் நிலைக் கிளவியினாகுவன:--வேங்கை என்பது ஒருமரத்திற்குப் பெயராயினும், புலிக்கும் பெயராயிற்று. அதுவுமன்றிக் கைவேம் என்னும் பொருளும் பட்டது. இவ்வாறு ஒரு சொல்லினானே பிறிதுபொருள் உணரின், அதை யுணர்த்தும் ஓசை எஞ்சிநின்ற தெனக்கொள்க.
இது பலபொருளொருசொல் அன்றோ எனின், ஆம்; பல பொருட்கண் ஒருசொல் வருதற்கு இலக்கணம் ஈண்டு உணர்த்துகின்றது. என்னை உணர்த்தியவாறு எனின், வேங்கை என்னுஞ் சொல், புலிப்பொருண்மை யுணர்த்திற்றாயின், மரப் பொருண்மை யுணர்த்தும் சொல் யாது என ஒருகடா வரும். அக்கடா வேங்கை என்றும் சொல்லின்கண்ணே மரப் பொருண்மையை உணர்த்துவதோர் ஓசை எஞ்சிநின்ற தெனினல்லது விடைபெறாதாம். அதனானே இலக்கண முணர்த்தியவாறு அறிந்து கொள்க.
‘திசைநிலைக் கிளவியி னாகுநவும்’ என்பது செந்தமிழ் நாட்டு வழங்குஞ் சொல் திசைச் சொல்லாகியவழிப் பொருள் வேறுபடுதல். கரை என்பது வரம்பிற்குப் பெயராயினும், கருநாடர் விளித்தற்கண் வழங்குப.
தொன்னெறிமொழி யென்றதனான் முந்துற்ற வழக்காகித் தொடர்வுபட்டுச் செய்யுளகத்தினும், பரவை வழக்கினும் வருந் தொடர்மொழி என்று கொள்ளப்படும். ‘குன்றேறாமா’ என்றவழி, குன்று, ஏறு, ஆ, மா எனவும் படும்; குன்றின்கண் ஏறாநின்ற ஆமா எனவும் படும்; குன்றின் கண் ஏறா மா எனவும் படும். இவ்வாறு வரும் பொருட்கெல்லாம் இத்தொடர்மொழி தானே சொல்லாகி இதன்கண் இசை வேறுபட்டுப் பொருள் வேறுணர்த்தலின், அப்பொருண்மைகளை யுணர்த்தும் இசை எஞ்சிநின்றது. “காதற் கொழுநனைப் பிரிந்தல ரெய்தா-மாதர்க் கொடுங் குழை மாதவி தன்னொடும்” என்றவழி, இச் சொல்லெல்லாம் குருக்கத்திக்கும் அடையாகி மாதவி என்னும் ஒரு பெண்பாற்கும் அடையாகிப் பொருள் வேறுபடுதலின், இசை யெச்சமாயிற்று. இது தனிமொழியாகிய பெயர்நிலைக் கிளவியின் அடங்காமையின், தொடர்மொழி யென்று வேறோதினார்.
மெய்ந்நிலை மயக்கமாவது பொருணிலைமை மயக்கங் கூறுதல். 2“குருகுகரு வுயிர்ப்ப, ஒருதனி யோங்கிய திருமணிக் காஞ்சி” என்றவழிக், குருகு என்பது மாதவியென்னுங் கொடிக்கும் பெயராதலின், அப்பெயருடையதனைக் குருகு என்றார். காஞ்சி என்பது மேகலைக்குப் பெயராதலின், அது மணிக்காஞ்சி என்றொட்டி மணிமேகலை யென்பாள்மேல் வந்தது. இவ்வாறு பொருணிலை மயங்க வருவனவும் இசையெச்சமாம் என்றவாறு. மந்திரம் என்பது பிறரறியாமல் தம்முள்ளார் அறிய மறைத்துக்கூறுஞ் சொல். அதன்கண் ஆகுவன, உலகினுள் வழங்குகின்ற பொருட்குத் தாம்
அறிகுறியிட்டு ஆண்டுவருங் குழுவின்வந்த குறிநிலை வழக்கு. அது வெளிப்பட்ட சொல்லால் உணரும் பொருட்கு மறைத்துப் பெயரிடுதலும், எழுத்திற்குப் பிறபெயரிட்டு வழங்குதலும் என இருவகைப்படும். இவையும் பொருள் வேறுபடுத்தி வழங்குதலின் இசை யெச்சமாயின. அவற்றுள், பொருட்கு வேறு பெயரிட்டன:--3வண்ணக்கர் காணத்தை நீலம் என்றலும், யானைப்பாகர் ஆடையைக் காரை என்றலும் முதலாயின. எழுத்திற்கு வேறு பெயரிட்டு வழங்குமாறு:--“மண்ணைச் சுமந்தவன்றானும் வரதராசன் மகன்றானும், எண்ணிய வரகாலிமூன்று மிரண்டு மரமும் ஓர்யாறும், திண்ண மறிய வல்லார்க்குச் 4சிவகதியைப் பெறலாமே.” இதனுள் மண்ணைச் சுமந்தவன்-ந, வரதராசன் மகன்-ம, வரகாலி மூன்று-சி, இரண்டுமரம்-வா, ஓர்யாறு-ய எனக்கூற, நமச்சிவாய எனப் பொருளாயிற்று. பிறவும் அன்ன.
1. ‘சினைநிலைக் கிளவியின் ஆஅ குநவும்’ என்பது இளம்பூரணர் கொண்ட பாடம்.
2. மணி-காதை-18. வரி-55, 56.
3. மயிலை-150ஆம் பக்கம் பார்க்க.
4. சிவகதியும் பெறலாமே என்பதும் பாடம்.