இதுவும் அது

440.செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்
செய்யென் கிளவி ஆகிடன் உடைத்தே.

இது வினைச்சொற்கு உரியதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். செய்யாய் என்னும் ஆய் ஈற்று முன்னிலை வினைச் சொல், செய் என்னும் ஏவல் குறித்த வினைச்சொல்லுமாகி வரும், எ - று.

எ - டு. நீ எம் இல்லத்து உண்ணாய் என்றவழி, உண்ணாமையைக் குறித்தலே யன்றி உண்க என்பதும் குறித்தவாறு கண்டுகொள்க. இவ்வாறு வருவதும் இசையெச்சம்.

இன்னும் இச்சூத்திரத்திற்குப் பொருள் செய்யாய் என்னும் வினைச் சொல் செய் எனக் குறைந்து நிற்கவும் பெறும் என்றவாறு. உண்ணாய் என்பது உண் எனவரும்.

(48)