குறைச்சொல்

443.குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி அறிதல்.

குறைச் சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். யாதானுமொரு சொல்லைக் குறைக்க வேண்டுவழிக்’ குறைக்க வேண்டுமிடமறிந்து குறைக்க, எ - று.

அது தலைக்குறைத்தலும், இடைக்குறைத்தலும் கடைக்குறைத்தலும் என மூவகைப்படும்.

எ - டு. ‘மரையிதழ் புரையு மஞ்செஞ் சீறடி’ என்றவழித், தாமரை யென்பது தலைக்குறைந்து நின்றது. 1‘அகலிரு விசும்பினாஅல்’ என்றவழி ஆரல் என்பது இடைக் குறைந்து நின்றது. ‘நீலுண்டுகிலிகை என்றவழி) நீலம் என்பது கடைக் குறைந்து நின்றது.

தொகுக்குவழித் தொகுத்தல் என்பதனோடு இதனிடை வேறுபாடென்னை யெனின், ஆண்டுவிரிந்து நின்ற சொற்றொகுக்க வேண்டுவழித் தொகுமாறு கூறினார். ஈண்டு, இயற்கையிற் குறைதலிற் குறைச்சொல் லென்றார்.

(51)


1. மலைபடு-100.