வினையெச்சத்திற்குரிய வேறுபாடு

447.வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய.

வினையெச்சத்திற்குரியதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

- ள். வினையெச்சச்சொல்லும் வேறுவேறாகிய பல இலக்கணத்தையுடைய, எ - று.

வேறுகுறிய என்னாது பல்குறிய என்றது சொல்லானும், பொருளானும் வேறுபடும் என்பது அறிவித்தற்கெனக் கொள்க. சொல்லான் வேறுபடுதலாவது பொதுவகையான் எடுத்து ஓதிய செய்து, செய்யூ என்பன, உகர ஊகார ஈறாகி வருதலேயன்றிப், பிறவீற்றானும் வருதலும், எச்சச் சொல்லாகி வரற்பாலது முற்றுச்சொல்லாகி வருதலும். பொருளான் வேறுபடுதலாவது ஒருவாய்பாட்டான் உணரும் பொருளை மற்றொரு வாய்பாட்டாற் கூறுதலும். எல்லா வினையெச்சமும் பிரித்துநோக்குவார்க்குப் பெரும்பான்மையும் வேற்றுமைப் பொருளாகித் தோற்றுதலும்.

அவையாமாறு:--செய்தெனெச்சத்துக்கண் ஓடி, போய் எனவும், செய்யூ என்பதன்கட் செய்யாயெனவும் வருவன ஈறுவேறுபட்டு வந்தன.

1‘மோயினள் உயிர்த்தகாலை’ எனவும், “ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி” எனவும் கண்ணியன் வில்லன் வருமெனவும் வரும். இவை வினையெச்சமுற்றாகி வந்தன. இவற்றுள், மோந்து என்பது மோயின ளெனவும், கொய்ய வென்பது கொய்குவமெனவும், கண்ணியணிந்து வில்லையேந்தி யென்பன கண்ணியன் வில்லன் எனவும் முற்றுவாய்பாட்டான் வரினு மெச்சப்பொருண்மைத்தாகலின் வினையெச்சமெனப்பட்டன.

அஃதேல், முற்றென்பதொன்றில்லையால், முற்றும் எச்சப்பொருண்மைத்தாக வருதலின்? எனின், அஃதாமிடனுமாகாதவிடனும் அறிதல் வேண்டுமென்பது வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். 2“உரற்கால்யானை யொடித்துண் டெஞ்சிய - வாய்வரி நீழற் றுஞ்சும்” என்றவழி உண்டென்பது வினைமுதல் வினையொடு முடியாமையின், உண்ணாவெனத் திரித்தல் வேண்டிற்று. இந்நிகரன ஈறுதிரிந்தன. மருந்துண்டு நோய்தீர்ந்தான், மழை பெய்ய மரங்குழைத்து என்பனவற்றைப் பிரித்துநோக்க, மருந்துண்டலான், மழைபெய்தலான் என வேற்றுமைப்பொருள்பட்டன.

அஃதேல், இவை வேற்றுமை மயங்கியலுட் கூறப்பட்டன வன்றோவெனின், ஆண்டு வேற்றுமைப்பொருள் வினைச்சொல்லானும் விளங்குமென அதன் இலக்கணங்கூறினார். ஈண்டு வினையெச்சம் வேற்றுமைப்பொருள்படுமென்று இதன் இலக்கணங் கூறினாரென்க. வினையெஞ்சு கிளவியுமென்ற உம்மை இறந்தது தழீஇயிற்று.

(55)


1. அகம் 5.

2. குறுந். 232.