இதுவும் அது

45. 1எண்ணுங் காலை யதுவதன் மரபே.

மேலதற்கு எய்துவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். வேறு வேறு வினையையுடைய பொருளைப் பொதுப் பெயராற் கூறுதலன்றி எண்ணுமிடத்தும் அதன் மரபு பொது வினையாற் கிளத்தல், எ - று.

எ - டு. அம்பும், வேலும், தண்டும், வாளும் வழங்கினார் என்க. எறிந்தார் எய்தார் என ஒரு வினையாற் கிளவற்க. ஊன்றுவை-கறிசோறுண்டு வருந்துதொழில் அல்லது பிறிதுதொழி லறியா வாகலின் (புறநா - 14.) என்றவழி உண்டு என ஒரு வினையான் வந்ததால் எனின், அது பொதுவினை என்று கொள்க. என்னை? உண்ணுநீர் வேட்டேன் என வந்தாற்கு (கலி - குறி. 15) எனவும், பாலுமுண்ணாள் பழங்கண் கொண்டு (அகம் - 48) எனவும், கலைப்புற வல்குல் கழுகுகுடைந்துண்டு (மணிமே - 6, சக் - 112) எனவும், கள்ளுண்ணாப் போழ்து (குறள்-930) எனவும், உண்ணாமை வேண்டும் புலா அல் (குறள்-257) எனவும் வருதலின்.

(45)


1. எண்ணுங்காலும் அதுவதன் மரபே, என்பதும் பாடம். இதுவே பிற உரையாசிரியர்கள் அனைவரும் கொண்ட பாடம்.