குறிப்பில் பொருள் தருவன

449.முன்னத்தி னுணருங் கிளவியு முளவே
இன்ன வென்னுஞ் சொன்முறை யான.

மனக்கருத்தினாற் பொருளுணருமிட முணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். சொல்லினானன்றி இத்தன்மையவென்னுஞ் சொல்லினது தொடர்ச்சிக்கண் மனக்குறிப்பினாற் பொருளுணரப்படும் சொல்லும் உள, எ - று.

உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. 1”தொடி நோக்கி மென்றோளு நோக்கி அடிநோக்கி, யஃதாண்டவள்செய் தது” என்றவழி, இருப்போமாயின், வளை கழன்று தோள்மெலியுமெனக் கருதி, நடக்க வல்லீராகல் வேண்டுமென அடியை நோக்கினாளாதலான், உடன்போதற்குக் கருதினாளென இப்பொருளெல்லாம் அவள் குறிப்பினானுணர நின்றவாறு கண்டுகொள்க.

இது சொல்லினானுணராமையான் எடுத்தோதல் வேண்டிற்று, பிறவும் இந்நிகரன அறிந்துகொள்க.

(57)


1. குறள். 1279.