எண்ணின்கண் கிடந்ததோர் மரபு

48.உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும்
பெயரினும் தொழிலினும் பிரிபவை யெல்லாம்
மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன.

எண்ணின்கட் கிடந்ததோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று,
வழுக்காத்ததுமாம்.

இ - ள். உயர்திணைக் கண்ணும் அஃறிணைக் கண்ணும் பெயரானும் தொழிலானும் பொதுமையிற் பிரியும் பொருளெல்லாம் எண்ணுங்கால், தம்முள் மயங்குதல் கூடாத வழக்கு வழிப்பட்டன, எ - று.

மரபல என்றவாறு; எனவே, இனஞ்சேர எண்ணல் வேண்டும் என்ற வாறாயிற்று. எண்ணுங்கால் என்பது தந்துகொணர்ந் துரைத்தல் என்னும் தந்திர உத்தியால், வருகின்ற சூத்திரத்தினின்றுங் கொணர்ந் துரைக்கப்பட்டது.

எ - டு. முனிவரும் அந்தணரும் சான்றோரும் எனவும், பாணருங் கூத்தரும் விறலியரும் எனவும், முத்தும் மணியும் பவளமும் பொன்னும் எனவும், மாவும் மருதும் புன்னையும் ஞாழலும் எனவும் எண்ணுக. இவை பெயர். எறிவாரும் எய்வாரும் வெட்டுவாரும் குத்துவாரும் எனவும், ஆடுவாரும் பாடுவாரும் நகுவாரும் எனவும், உண்பனவும் தின்பனவும் பருகுவனவும் நக்குவனவும் எனவும் எண்ணுக. இவை வினை, அஃதேல்,

‘ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வற் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்’

(புறநா. 9)

எனக் காட்டி இதனுள் அடங்காதால் எனின், அவையும் உய்யத்தகுவார் இவரென்னும் இனங்குறித்து நின்றனவென்று கொள்க. பிறவும் அன்ன

(48)