வினைவேறுபடும் பலபொருளொரு சொல் பொருளுணர்த்துமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். மேற் கூறப்பட்டவற்றுள் வினைவேறுபடும் பல பொருளொருசொல்பொருள் தெரியுங்காலத்து வேறுபட்ட வினையினானும், இனத்தினானும், சார்பினானும் தெளியத்தோன்றும், எ-று.
எ - டு. மா காய்த்தது, வேங்கை பூத்தது என்றவழி மரம் என்பது அறியப்பட்டது. மா ஓடிற்று; வேங்கை பாய்ந்தது என்றவழி விலங்கு என்பது அறியப்பட்டது. இவை தனித்தனிப் பொருள் உணர்த்தின.
இவ்வூர் மக்களெல்லாம் போர்க்குப் போயினார் என்றவழி ஆண்பால் உணரப்பட்டது. இவ்வூர் மக்களெல்லாம் தைந்நீராடினார் என்றவழிப் பெண்பால் உணரப்பட்டது. இவ்வூர்ப் பெற்றமெல்லாம் அறம் கறக்கும் என்றவழிப் பெண்பால் உணரப்பட்டது. இவ்வூர்ப் பெற்றமெல்லாம் உழவு ஒழிந்தன என்றவழி ஆண்பால் உணரப்பட்டது. இவை பொதுப்பொருள் உணர்த்தின.
இவை வினையினாற் பொருள் விளக்கின.