மேலதற்கோர் புறநடை யுணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். வினைவேறுபடும் பல பொருள் ஒரு சொல், வேற்று வினை கொண்டு முடிதலேயன்றி இருபொருட்கும் பொருந்தின ஒருவினை கொண்டு முடியின், பிறிதொரு சொல்லோடு ஒன்றிப் பொருள் தோன்றும், எ - று.
பிறிதொரு சொல்லென்பது எஞ்சி நின்றது.
எ - டு. மாவீழ்ந்தது என்றவழி இன்ன மாவென்பது அறியாலாகாமையின், யானை முறித்தலால் வீழ்ந்தது என்றவழி மரம் என்பதூஉம், அம்பு படுதலான் வீழ்ந்தது என்றவழி விலங்கு என்பதூஉம் உணர்த்தியவாறு கண்டுகொள்க.
(52)
1. 51, 52-ஆம் சூத்திரங்களைச் சேனாவரையர் ஒன்றாக்குவார்.
53. | வினைவேறு படாஅப் பலபொருள் ஒருசொல் நினையுங் காலைக் கிளந்தாங் கியலும் |
இது வினைவேறுபடாப் பலபொருள் ஒருசொல் பொருள்
உணர்த்துமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். வினை வேறு படாத பல பொருள் ஒரு சொல் பொருள் உணருங்கால் எடுத்துக்கூறல் வேண்டும், எ - று.
எ - டு. சேவல், பெடை என்பன வினையால் வேறுபடாமையால் அன்னச் சேவல், குயிற் சேவல், அன்னப் பெடை, குயிற் பெடை என எடுத்துக் கூறப் பொருள் விளங்கினவாறு கண்டு கொள்க.
(53)