சில உயர்திணைப் பெயர் அஃறிணை முடிபு கோடல்

55.

குடிமை யாண்மை இளமை மூப்பே
அடிமை வன்மை விருந்தே குழுவே
பெண்மை யரசே மகவே குழவி
தன்மை திரிபெயர் உறுப்பின் கிளவி
காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொலென்று
ஆவறு மூன்றும் உளப்படத் தொகைஇ
அன்ன பிறவும் அவற்றொடு சிவணி
முன்னத்தின் உணருங் கிளவி யெல்லாம்
உயர்திணை மருங்கின் நிலையின வாயினும்
அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும்.

திணை வழுவமைதி யுணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். குடிமை முதலாக எண்ணப்பட்டனவும், அத்தன்மைய பிறவும் அவற்றொடு பொருந்திக் குறிப்பினான் உணருங் கிளவி யெல்லாம் உயர் திணை மருங்கில் நின்றன வாயினும் அஃறிணையிடத்துச் சொல்லான் வழங்கப்படும், எ - று.

உயர்திணை மருங்கின் நிலையினவாயினும் என்ற உம்மையான் இவையெல்லாம் பண்பு குறித்தவழி அஃறிணையாம் என்பதூஉம், பொருள் குறித்தவழி உயர்திணையாம் என்பதூஉம் கூறியவாறாயிற்று.

குடிமையாவது குடியாகிய தன்மை, அது அக்குடியிற் பிறந்தாரைக் குறித்து நின்றது. இக்குடி வாழ்ந்தது, இக்குடி கெட்டது என்ப.

குடிமை என்பது குடி என வருமோ எனின் “மடிமை குடி மைக்கட்டங்கிற்றன் னொன்னார்க்(கு)--அடிமை புகுத்தி விடும்” (குறள் 608) என்றவழிக் குடி எனப் பொருளாகியவாறு கண்டுகொள்க.

ஆண்மை யென்பது ஆணாகிய தன்மை; அத்தன்மையைக் குறித்து ஓர் ஆண் வந்தது என்ப.

இளமை யென்பது இளையாரைக் குறித்து நிற்கும், இவ்வவை இளமையின்று என இளையாரை இலது என்னும் பொருள்பட வந்தது.

மூப்பு என்பது முதியாரைக் குறித்து நிற்கும். இவ்வவை மூப்பு இன்று என முதியாரை இலது என்னும் பொருள்பட வந்தது.

அடிமை என்பது அடிமைத் தொழில் செய்வார் மேற்று. அவன தடிமை வந்தது என அப்பொருள் குறித்து நின்றது.

வன்மை யென்பது வலியாகிய தன்மை. அவனது வலி போயிற்றென அவற்குத் துணையாயினாரைக் குறித்து நின்றது.

விருந்து என்பது புதுமை, விருந்து வந்ததென, புதியார் வந்தார் என்பது குறித்து நின்றது.

குழூஉ என்பது திரள். குழூஉப் பிரிந்தது, அவை எழுந்தது, படை திரண்டது என்ப குழுவிய மாந்தரைக் குறித்து.

பெண்மை என்பது பெண்ணாகிய தன்மை. ஒரு பெண் வந்தது என்ப.

அரசு என்பது அரசத்தன்மை, அரசிருந்தது என்ப அரசன் என்பதைக் குறித்து.

மக என்பது மகன், மகள் என்னும் முறைப்பெயர் இரண்டற்கும் பொதுவாக நிற்பது. மகக் கிடந்தது என்ப.

குழவி என்பது அப்பொருளின் இளமை குறித்து நிற்கும். குழவி அழுதது என்ப.

தன்மை திரிபெயர் என்பது தன் இயல்பிற் றிரிந்த பொருட்பெயர்.
அது
மருள் என்பது. அதனை மருள் வந்தது என்ப.

உறுப்பின் கிளவி என்பது உறுப்பினாற் கூறப்படும் சொல். அஃதாவது குருடு முடம் என்பன. குருடு வந்தது, முடம் வந்தது என்ப.

காதல் என்பது காதல்பற்றி நிகழுஞ் சொல். காதற்சொல் சிறப்புச் சொல் என ஒரு சொல் வருவிக்க, என் பாவை வந்தது, என் யானை வந்தது என்ப.

தன் மக்களை ஈங்கிதோர் நல்கூர்ந்தார் செல்வமகள் (கலி. 56) என்றவழி இது என்பது காதல்பற்றி வந்தது.

சிறப்பு என்பது சிறப்பைப்பற்றி வருஞ்சொல், ‘கண்போலச் சிறந்ததனை என்கண் வந்தது என்ப.

செறற் சொல் என்பது செறலினாற் கூறுஞ் சொல். என்பகை வந்தது, திருவிலி வந்தது என்ப. ஏஏ இஃதொத்தன் (கலி. 62) என்றவழி இஃதென்பதும் அது.

விறற் சொல் என்பது வீரியத்தாற் கூறுஞ்சொல், விறல் வந்தது, சிங்கம் வந்தது, புலி வந்தது என்ப அவ்வீரியங்குறித்து.

அன்ன பிறவும் என்றதனால், குடும்பம் வாழ்ந்தது, வேந்து சென்றது, ஆள் வந்தது, அமைச்சு வந்தது, தூது வந்தது, ஒற்று வந்தது, நட்பு நன்று என்பன கொள்க.

அவற்றொடு சிவணி முன்னத்தின் உணருங் கிளவி யெல்லாம் என்றதனால், உலகு வாழ்ந்தது, நாடு வந்தது, ஊர் வந்தது என்பது அவ்விடத்திலுள்ள மாந்தரைக் குறித்தது. பிறவும் அந்நிகரனவெல்லாம் கொள்க.

இவை யெல்லாம் ஆகுபெயர் அன்றோ எனின் ஆகுபெயராயின் தன் பொருட்டு உரிய பாலான் முடியும், இவை அன்னவன்றி வேறுபட்டு முடிதலிற் குறிப்பு மொழியாயின.

(55)