உயர்திணைப் பொருட்கண் எஞ்சியது உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். காலம் முதலாகச் சொல்லப்பட்டனவும் அத்தன்மைய பிறவுமாகிய பொருட்கண் வரும் சொல்லெல்லாம் உயர்திணை யிடத்தன. ஆண்டுப் பால் பிரிந்திசையா, எ - று. காலம் என்பது முன்னும் பின்னும் நடுவும் ஆகி என்றும் உள்ளதோர் பொருள். உலகம் என்பது மேலும் கீழும் நடுவும் ஆகி எல்லாவுயிரும் தோற்றுதற்கு இடமாகிய பொருள். உயிர் என்பது சீவன். உடம்பு என்பது மனம் புத்தி ஆங்காரமும் பூத தன்மாத்திரையுமாகிய வினையினாற் கட்டுப்பட்டு எல்லாப் பிறப்பிற்கும் உள்ளாகி நிற்பதோர் நுண்ணிய உடம்பு. இதனை மூலப்பகுதி எனினும் ஆம். பால்வரை தெய்வம் என்பது ஆணும் பெண்ணும் அலியும் ஆகிய நிலைமையை வரைந்து நிற்கும் பரம்பொருள். வினை என்பது ஊழ். பூதம் என்பது நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதம். ஞாயிறு என்பது தீத்திரளாய் உலகு விளக்குவது. திங்களென்பது நீர்த்திரளாய் உலகிற்கு அருள் செய்வது. சொல் என்பது எழுத்தினான் இயன்று பொருள் உணர்வது. அச்சொல்லினான் இயன்ற மந்திரம், விடம் முதலாயின தீர்த்தலின் தெய்வம் ஆயிற்று. இந்நூல் செய்தான் வைதிக முனிவன் ஆதலின் சொல்லென்பது வேதம் என்று கொள்ளப்படும். பிறவும் என்றதனால், வியாழம், வெள்ளி முதலாயின கோண்மீனும், பரணி, கார்த்திகை முதலாயின நாண்மீனும், தாரகையும், பூதம், பேய்எனப் பாலுணர நில்லாத தெய்வப் பொருண்மையும் கொள்ளப்படும். உதாரணம் 1முன்னர்க்காட்டுதும். (56)
1. 57 ஆம் சூத்திரம்.
|