இது செப்பின்கட் கிடந்ததோர் குறிப்பு உணர்த்துதல்
நுதலிற்று.
இ - ள். எடுத்துச் சொல்லப்பட்ட சொல் தனக்கு இனமாகிய பொருளைச் சொல்லுதலும் உரித்து. எ-று. உம்மையாற் சொல்லாமையும் உரித்து, எ-று.
தென்சேரிக் கோழி வென்றது என்றவழி, வடசேரிக் கோழி தோற்றது என்னும் பொருளும் காட்டி நின்றது. இது இனம் செப்பியது.
அந்தணர் வாழ்க என்றவழி, அரசரும் வணிகரும் கெடுக என்றவாறன்றி, அந்தணரையே குறித்து நின்றது. இஃது இனம் செப்பாது வந்தது.
இன்னும் இச்சூத்திரத்தின்கண் இனம் செப்பலும் உரித்து என்றதனாலே இனமல்லாதன செப்பலும் உரித்து என்று கொள்ளப்படும். அவ்வாறு வருவன ஏற்புழிக் கொள்க. சுமந்தான் வீழ்ந்தான் என்றவழி,சுமவாதவன் வீழ்ந்திலன் என்னும் பொருள்படுதலே யன்றிச் சுமக்கப் பட்டதும் வீழ்ந்ததெனச் செப்பியவாறுங் கண்டு கொள்க. பிறவும்அன்ன.
(59)