வேற்றுமைச்சொற்கு ஈற்றெழுத்து வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்ட வேற்றுமைகள் தாம் பெயர் ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளி யென்று சொல்லப்பட்ட ஈ.றுகளையுடைய, எ-று. விளி யீறாவது விளிக்கண் வரும் எழுத்துக்கள். பிறவும் வேற்றுமை ஈறு உளவாயினும் சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல் என்பதனால் இவைஎன்பதனால் இவை எடுத்து ஓதப்பட்டன. எடுத்தோதாதன, மூன்றாவதன்கண் ஆன் ஆல் ஓடு; ஆறாவதன்கண் அ; ஏழாவதன்கண் இடப்பொருண்மை உணர்த்துஞ் சொற்கள். எ - டு. சாத்தன், சாத்தனை, சாத்தனொடு, சாத்தற்கு, சாத்தனின், சாத்தனது, சாத்தன்கண், சாத்தா எனவரும். ஐ முதலாயின மற்றொரு பெயர்க்கு ஈறாகி வருதலின், பெயரீறு என்பது விளங்கும். அங்ஙனமே பெயரும் மற்றொரு பெயர்க்கு ஈறாகி வரல் வேண்டும் எனின் அஃதன்று கருத்து. பெயர்தானே ஈறாகியும், பிற எழுத்தோடு கூடி ஈறாகியும் வருமென்று கொள்ளப்படும். இவ்வேற்றுமைகளை இவ்வீற்று வேறுபாட்டானே, பெயர் வேற்றுமை, ஐகார வேற்றுமை, ஒடு வேற்றுமை, குவ் வேற்றுமை, இன் வேற்றுமை, அது வேற்றுமை கண் வேற்றுமை. விளி வேற்றுமை எனவும் குறியிட்டு வழங்குப. அஃது யாண்டுப் பெறுதும் எனின், ஐ யெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி (சொல். 68) ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி (சொல். 70) என்புழியும் பிறாண்டும் பெறுதும். (2)
|