மேல், வேற்றுமை எட்டு என்பதும், அவற்றுக்கண் வரும் ஈறும் கூறினார் அல்லது, அவற்றது பெயரும் முறையும் கூறிற்றிலர் அன்றே, அவை கூறுவார், முற்பட, முதல் வேற்றுமையாவது இஃது என்பது உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள் முதல் வேற்றுமையாவது பெயர் தோன்றும் நிலை, எ - று. அஃதேல், பெயர் என அமையும், தோன்றும் நிலை என்றதனாற் பயன் என்னை யெனின், பெயர் கண்டுழியெல்லாம் வேற்றுமை யென்று கொள்ளற்க என்பது அறிவித்தற்கெனக் கொள்க. அஃது யாதோ எனின், ஆயன் சாத்தன் வந்தான் என்றவழி ஆயன் என்பது சாத்தற்கு அடையாகி நிற்றலானும், வருதற்றொழில் சாத்தனொடு முடிதலானும், இருபெயரும் ஒரு பொருட்கண் வருதலின் இரண்டினையும் வேற்றுமை எனப்படாது ஆகலானும் இறுதி நின்றதே வேற்றுமை எனப்படுவது என்று கொள்க. இதனை எழுவாய் வேற்றுமை யடுக்கென்றார் உளரால் எனின், ஆயன் சாத்தனை வெட்டினான் என்ற வழி, இறுதி நின்ற பெயர் உருபேற்று இரண்டாம் வேற்றுமையாயிற்று. ஆண்டு உருபு ஏலாத ஆயன் முதல் வேற்றுமை யாதல் வேண்டும். அவ்வாறாக, வெட்டினான் என்பது ஒற்றுமைப்பட்டு முடியாதாகலான்அது பொருளன்று என்க. அஃதற்றாக, பெயரை முதல் வேற்றுமை என்னாது, எட்டு வேற்றுமையுள்ளும் யாதானும் ஒன்றை முதல் வேற்றுமை எனினும் அமையும் எனின். ஒருவன் ஒன்றை ஒன்றானே யியற்றி ஒருவற்குக் கொடுப்ப, அவன் அதனை அவனினின்றும் தனது ஆக்கி ஓரிடத்து வைத்தான் கொற்றா என்ற வழி, செய்கின்றான் முதல் வேற்றுமையாகி இம்முறையே கிடத்தலின் அமையாது என்க. அஃதேல், யாற்றினது கரைக்கண் நின்ற மரத்தை அறச்சாலை யியற்றுதற்கு ஊரினின்றும் வந்து மழுவினானே வெட்டினான் சாத்தன் என்றவழி. எழுவாயாகிய பெயர் ஏழாவதுமாய் நின்றதால் எனின், சொல்லுவான் குறிப்பினான் முதல் வேற்றுமையாயிற்று என்பது கருத்து. யாதானும் ஒரு தொழிலும் செய்வான் உள்வழி அல்லது நிகழாமையின் அது செய்து முடிக்கும் கருத்தா முன் வைக்கப்பட்டான். அவன் ஒரு பொருளைச் செய்து முடிக்குங்கால் செய்யத்தகுவது இது எனக் குறிக்கவேண்டுதலின் செயப்படுபொருள் இரண்டாவது ஆயிற்று. அவ்வாறு அப்பொருளைச் செய்து முடிக்குங்கால் அதற்காங் கருவி தேடுமாதலின் அக்கருவி மூன்றாவதாயிற்று. அவ்வாறு, செய்து முடித்த பொருளைத் தான் பயன்கோடலே யன்றிப் பிறர்க்குங் கொடுக்கும் ஆதலின் அதனை ஏற்று நிற்பது நான்காவது ஆயிற்று. அவ்வாறு கொடுப்புழி அவன் கையினின்றும் அப்பொருள் நீங்கி நிற்பது ஐந்தாவது ஆயிற்று. அவ்வாறு நீங்கின பொருளைத் தனதென்று கிழமை செய்தலின் அக்கிழமை ஆறாவது ஆயிற்று. ஈண்டுக் கூறப்பட்ட எல்லாவற்றிற்கும் இடமும் காலமும் பொதுவாகி நிற்றலின், அவை ஏழாவது ஆயின. இவையிற்றோடு ஒத்த இயல்பிற்று அன்றி எதிர் முகம் ஆக்குதற்பொருட்டு ஆகலின், விளி என்பது எல்லாவற்றினும் பிற் கூறப்பட்டது. அஃதேல் ஆறாவதாகிய கிழமை, கொண்டான்கண்ணாதலேயன்றிச் செய்தான்கண் இயையாதோவெனின் தோற்றுவித்தாற்குக் கிழமை சொல்லாமலும் பெறும், அதனைக் கொண்டாற்கே கிழமை கூறல் வேண்டுவது என்க. (3)
|