எழுவாய் வேற்றுமைக்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். பொருண்மை சுட்டல் என்பது, முடிக்குஞ்சொல் எழுவாயாகி நின்ற பொருடன்னையே சுட்டி, அதன் தொழில் முதலாயின சுட்டாது நிற்கும் நிலைமை, எ - று. எ - டு. சாத்தன் உளன் எனவரும். வியங்கொள வருதலாவது தொழிலைப் பெயர்ப்பொருண்மை கொள்ளுமாறு வரும் ஏவற்சொல். எ - டு. சாத்தன் செல்க. வினைநிலை யுரைத்தலாவது அப் பொருளின் தொழிலின் நிலைமையை உணர்த்தவருஞ் சொல். எ - டு. சாத்தன் சென்றான். வினாவிற் கேற்றலாவது. அப்பெயர்ப் பொருண்மையை வினாவுதற்கு ஏற்புடைய சொல். எ - டு. சாத்தன் யாவன்? சாத்தன் யாண்டையன்? சாத்தன் எத்தன்மையன்? என்பன. பண்புகொள வருதலாவது, அப்பெயர்ப் பொருண்மை பண்பு கொள்ளுமாறு வருஞ் சொல். எ - டு. சாத்தன் கரியன், நெடியன் என்பன. பெயர்கொள வருதலாவது, அப்பெயர்ப் பொருண்மை யுணரப் பிறிதோர் காரணத்தான் வந்து முற்பெயரோடு ஒட்டுப்படாது நிற்பது. எ - டு. சாத்தன் வணிகன், முடவன் என்பன. என்று அன்றி யனைத்தும் பெயர்ப் பயனிலையே என்பது, என்று சொல்லப்பட்ட அவ்வனைத்தும் பெயர்க்குப் பயனிலையாம். எ - று. பயனிலை என்பது:-பெயர் வாளாது நிற்குமாயின், செப்பின்கட் பயனின்றாம் ஆதலான், அதனை முடிக்கும் சொல் பயனிலை என்றாயிற்று. அஃதேல், இவை யெல்லாம் பெயர்ப் பொருண்மையைச் சுட்டி நிற்றலின், பொருண்மை சுட்டல் என அடங்கும் எனின், அடங்குமாயினும் பொருண்மை சுட்டல் பொருண்மை மாத்திரத்தைக் குறித்தலானும், வியங்கொள வருதல் அப்பொருண்மை புடை பெயர்தற்கு நிமித்தம் ஆகி வருதலானும், வினைநிலையுரைத்தல் அப்பொருளின் புடைபெயர்ச்சி யாகலானும், வினாவிற்கேற்றல் அவ்வாறன்றி வினாவப்படும் நிலைமையதாகி நிற்றலானும், பண்புகொள வருதல் அப்பொருட்கண் உள்ளதோர் குணத்தைக் குறித்து நிற்றலானும், பெயர்கொள வருதல் அப்பொருண்மை முழுதும் உணரப் பிறிதோர் வாய்பாடாக வருதலானும், வகுத்துக் கூறினார் என்க. சாத்தன் தலைவன் ஆயினான், இரும்பு பொன் ஆயிற்று என்பன எவ்வாறு வந்தன எனின், அவையும் பொருளின் புடை பெயர்ச்சி யாகலானும், ஒன்று ஒன்றாகித் திரிதலாகிய வினையான் வருதலானும், வினைநிலையுரைத்தலுள் அடங்கும். அஃதேல்; தலைவன் பொன் என்னும் பெயரை எழுவாய் என்றுமோ பயனிலை என்றுமோ எனின் இரண்டும் அல்ல; தலைவன் ஆதல், பொன் ஆதல் எனத் திரிபு குறித்து நின்றன, பெயர் குறித்து நின்றன எனப்படா வென்க. அன்றி யனைத்தும் பெயர் முடிபு என்னாது பயனிலை என்றதனால் பயனிலை பெயர்க்கு முன்னிற்றலே யன்றிப் பின்னிற்றலும் ஆம் என்று கொள்க. எ - டு. உளன் சாத்தன்; செல்க சாத்தன்; வந்தான் சாத்தன்; யாண்டையான் சாத்தன்; கரியன் சாத்தன்; வணிகன் சாத்தன் எனவரும். ஈண்டுக் காட்டப்பட்ட உதாரணத்துள் வினைபற்றி வருவனவெல்லாம் முற்றுச்சொல் பெயர் கொண்டு முடிந்ததாம், பயனிலை மாறி நின்றன ஆகா வெனின்; முற்றுச்சொல் எனவே முடிந்த சொல் என்பது பெறுதும்; அது பின்னும் மற்றொரு சொல்லை அவாவி நிற்கும் என்றல் பொருந்தாமையானும், | ‘மற்றுச்சொ னோக்கா மரபின அனைத்தும் முற்றிநிற்பது முற்றியன் மொழியே’ |
என அகத்தியனார் ஓதுதலானும், மொழிமாறுதல் இலக்கணமாக எச்சவியலுள் ஓதுகின்றமையானும் அது சொல்லறியாதார் உரையென்க. (4)
|