எய்தியதன் மேற் சிறப்புவிதி வகுத்தலை நுதலிற்று.
இ - ள். பெயரான் ஆகிய தொகைச் சொல்லும் உள அவையும் எழுவாயாகிப் பயனிலை கோடற்கு உரிய, எ - று.
1பல் பொருட் கேற்பின் நல்லது கோடல் என்பதனால் பல பொருள் குறித்த பெயரே கொள்ளப்படும். உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை.
எ - டு. யானை குதிரை உள; செல்க; வந்தன; கரிய; யாண்டைய; பல-என வரும்.
அஃதேல், பலபொருள் குறித்து வருதல் வேண்டுமென்ற தென்னை? ஒரு பொருட்கண் வரும் பெயரும் தொகையாகாதோ எனின், தொகையாம் ஆயினும், இறுதிக்கண் நின்ற பெயர் பயனிலைகொண்டும் ஏனைய பெயர் பயனிலை ஏலாதும் நிற்கும். இவை இரண்டு பெயர் மேலும் பயனிலை ஒத்துவருதலின் வேறோதப்பட்டன.
(5)
1. இஃது ஏற்புழிக் கோடல் எனவும் கூறப்படும்.