பெயர்ச் சொற்கண் உருபுநிற்கும் நிலை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். சொல்லப்பட்ட உருபு முறையானே நின்ற நிலையைத் திரியாது பெயர்க்கு ஈறாகும் இயல்பினையுடைய, எ - று. முறையானே என்றது அடைவே ஒன்றொன்றாக என்றவாறு. நிலையைத் திரியாது என்றது உருபேற்று நிற்கும் பெயரைத் திரியாது அதன்கண் இயல்பாகி நிற்கும் என்றவாறு. இச் சூத்திரங் கூற வேண்டா; மேலைச் சூத்திரத்துப் பெயர் ஐ ஒடு கு இன் அது கண் விளி யென்னும் ஈற்ற என்பதனாற் பெறுதும் எனில், அது கருதியன்று கூறியது: வடமொழிக்கண் எழுவாயாகிய பெயர் ஈறுகெட்டு உருபேற்கும். அவ்வாறன்றித் தமிழ்மொழிக்கண் ஈறுதிரியாது எழுவாயாகிய பெயரின் மேலே உருபுநிற்கும் என்பது அறிவித்தற்கெனக் கொள்க. உதாரணம் மேற்காட்டப்பட்டன. வருகின்ற சூத்திரத்தின் கண்ணும் விளங்கும். (7)
|