இரண்டாம் வேற்றுமையின் பொருள்

69.1இரண்டா குவதே,
ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு
அவ்விரு முதலிற் றோன்று மதுவே.

நிறுத்த முறையானே இரண்டாம் வேற்றுமை உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். இரண்டாம் வேற்றுமை யாவது 2ஐ எனக்குறித்த வேற்றுமைச்சொல், அஃதியாதானும் ஒரு பெயர்க்கண் வரினும் வினையும் வினைக்குறிப்புமாகிய அவ்விரண்டு முதற்கண்ணும் தோன்றும். எ-று.

ஐகார வேற்றுமை இரண்டாவதென்னும் குறியும்பெற்றது, வினையென்பது செயல். வினைக்குறிப்பென்பது அவ்வினையினாற் குறிக்கப்பட்ட பொருள், அஃதாவது செயப்படுபொருள். முதல் என்பதனை வடநூலாசிரியர் காரகம் என்ப. அஃதாவது தொழிலை யுண்டாக்குவது, அது பல்வகைத்து--செய்வானும், செயலும், செயப்படுபொருளும், கருவியும், கொள்வானும், பயனும், காலமும், இடமும் என.

3“வினையே செய்வது செயப்படு பொருளே
நிலனே காலங் கருவியென்றா
இன்னதற் கிதுபய னாக வென்னும்
அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ
ஆயெட் டென்ப தொழின்முத னிலையே”

என முதனிலை எட்டென்றாராதலின், அவற்றுள் இது செயப்படு பொருள் மேலும் செயல்மேலும் வரும். குடத்தை வனைந்தான் என்பது செயப்படு பொருள்மேல் வந்தது. வனைதலைச் செய்தான் என்பது செயன்மேல் வந்தது. தொழின் முதனிலை யெட்டென்றமையால் காரகப் பொருண்மேல் வரும் வேற்றுமையெல்லாம் வினையான் முடியும் என்றுகொள்க.

(9)


1. இளம்பூரணர் இதனையும் அடுத்த நூற்பாவினையும் ஒரே நூற்பாவாகக் கொள்வர்.

2. ஐ என்று குறிபெற்ற வேற்றுமைச் சொல் என்பதும் பாடம்.

3. வேற்றுமை மயங்கியல்--28.