பலரறி சொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்.ரகாரம் ஆகிய ஒற்றும், பகாரம் ஆகிய உயிர் மெய்யிறுதியும், மார் என்னுஞ் சொல் உளப்பட இம் மூன்றும் பொருந்தப் பலரறிசொல் தோன்றும், எ-று.
மூன்றும் பொருந்த என்றாராயினும் பால் காட்டுவது தனித்தனியென்று கொள்க.
பகரம் என்னாது இறுதி யென்றது, பகரம் ஒன்றாகவரின் மொழிக்கு ஈறாகாமையின் உயிரீறு என்பது தோற்றுதற்கு. 2கானந் தகைப்ப செலவு 3எனப் பகரம் அஃறிணைக்கும் உரித்தாகலின் உயர்திணைக்கே யுரித்தாமாறு என்னை யெனின், அஃறிணைக்கண் ஓதுகின்ற அகரம் எல்லாப்புள்ளியினும் ஏறி முடிதலின் ஆண்டு அகர ஈறாகி வந்தது. ஈண்டுப் பகர ஒற்றின் மேல் அல்லது வாராமையிற் பகரம் என வேறுபட்டு நின்றது.
மார் என்பது ரகரத்துள் அடங்காதோ வெனின், வினைக்கண் ஏனைய போல முற்றிநில்லாது எச்சம் போல வருதலானும், பெயர்க்கண் ஆர் ஈறாகி வருமிடத்தும் பன்மை யுணர்த்தாத சொற்கள் மார் ஈறாகி வரவேண்டுதலானும் வேறுபடுத்தோதப் பட்டதென்க.
எ - டு. உண்டனர், உண்ணாநின்றனர், உண்பர், உண்ப, ஆ கொண்மார் வந்தார்; இவை வினை. கரியர், நெடியர்; இவை வினைக்குறிப்பு. அவர், இவர், நம்பியர், நங்கையர், தாய்மார், தந்தைமார்; இவை பெயர் 4பகர இறுதி அஃறிணைப் பெயராயல்லது வாராது.
(7)
1. உட்பட. இளம்பூரணம்.
2. கலி. பாலை. 2
3. இரண்டாம் ஏட்டின் உரை :- கானம் தகைப்ப செலவு எனவும், நயந்து தாங் கொடுப்ப போல் எனவும் அஃறிணைக் கண்ணும் வந்ததென எடுத்துக் காட்டினார் உளராலெனின், தாழிசை மூன்றனுள்ளும் தகைப்ப என ஓதியவண்ணம் அவ்வாறு சுரிதகத்துக்கண்ணும் வரின் அவ்வண்ணக்கேடு குறித்துக் குறைக்குவழிக் குறைத்ததென்க. நயந்து தாங் கொடுப்ப போலென்பது விரும்பிக் கொடுப்பாரைப் போலென மாந்தரொடு உவமை குறித்து வந்தது.